Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இயற்கை விவசாயத்தில் கல்லூரிப் பேராசிரியர்!

இன்றைய காலகட்டத்தில் இயற்கை விவசாயம் செய்வது சவால்கள் நிறைந்த ஒரு பாதை. சந்தைப்படுத்துதல், லாபம் ஈட்டுதல், கடின உழைப்பு எனப் பல தடைகளைத் தாண்டித்தான் ஒரு இயற்கை விவசாயி வெற்றி பெற முடிகிறது. இத்தகைய சவால்களை எதிர்கொண்டு, கடந்த ஏழு ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் வெற்றிகரமாக ஈடுபட்டு வருகிறார் நெல்லை, அம்பை அருகே கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த கல்லூரிப் பேராசிரியர் விஸ்வநாதன்.அவரது விவசாய முறையைப் பற்றித் தெரிந்துகொள்ள கல்லிடைக்குறிச்சியில் இருந்து 4கி.மீ தொலைவில் உள்ள தெற்குக் கரம்பை கிராமத்திற்கு சென்றோம். அங்குதான் இருக்கிறது விஸ்வநாதனின் 12 ஏக்கர் விவசாய நிலம். கல்லூரிப் பேராசிரியாக இருந்துகொண்டு எப்படி இந்த இயற்கை விவசாயம் சாத்தியம் எனக் கேட்டபோது, எல்லாம் விவசாயத்தின் மீதுள்ள ஆர்வம்தான் என பேச்சைத் தொடர்ந்தார்.காலை கல்லூரி, மாலை வயல். இப்படித்தான் இரண்டு பணிகளையும் செய்து வருகிறேன். அதுபோக, விடுமுறைநாட்களில் முழுநேரமும் விவசாயம்தான். விவசாயம் என்பது எனக்கு வெறும் தொழில் அல்ல, அது என் விருப்பம். மண்ணோடு மல்லுக்கட்டுவது எனக்கு மிகுந்த மன அமைதியைத் தருகிறது என மேலும் தொடர்ந்தார்.

கடந்த 7 ஆண்டுகளாகவே பாரம் பரிய நெல் ரகங்களைத்தான் பயிரிட்டு வருகிறேன். கறுப்பு கவுனி, தங்கச் சம்பா எனப் பல ரகங்கள் என்னுடைய வயலில் செழித்து வளர்ந்திருக்கின்றன. தற்போது நெல்லை மாவட்டம், அம்பை அருகிலுள்ள லட்சுமி தேவி என்பவர் மீட்டெடுத்த நெல்லையப்பர் என்ற நெல் ரகம் ஒன்று உள்ளது. இது மிகவும் சிறியதான நெல். 110 முதல் 120 நாட்களுக்குள்ளாகவே மகசூல் தந்துவிடும். இந்த நெல் ரகத்தை 5 ஏக்கரில் பயிரிட்டுள்ளேன்.கடந்த முறை கருங்குருவை பயிரிட்டிருந்தேன். அதுவும் 110 முதல் 120 நாட்களில் மகசூல் தரக்கூடியது. ஒரு ஏக்கருக்குச் சராசரியாக 18 மூட்டைகள் வரை கிடைத்தது. தங்கச் சம்பா நெல் ரகத்தில் ஏக்கருக்கு 27 மூட்டைகள் வரை மகசூல் கிடைத்தது. வியாபாரிகளிடம் இந்த அரிசியை மொத்தமாக விற்பனை செய்யும்போது, ஒரு மூட்டைக்கு ரூ.1500 முதல் ரூ.2500 வரைதான் கிடைக்கும். இயற்கை முறையில் சாகுபடி செய்யும்போது இந்த வருமானம் எனக்குப் போதுமானதாக இல்லை. அதனால், பாரம் பரிய நெல்லை அரிசியாக்கி, அரிசியை மாவாக்கி மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருகிறேன். அந்த வகையில், கருங்குருவை அரிசியில் அவல் தயாரித்து ஒரு கிலோ கருங்குருவை அவலை ரூ.150க்கு விற்பனை செய்கிறேன். சுவையும் ஆரோக்கியமும் அதிகமென்பதால் பலரும் இதனை ஆர்வத்தோடு வாங்கிச் செல்கின்றனர். அதேபோல, கருங்குருவை அரிசியில் இடியாப்ப மாவு தயார் செய்து ஒரு கிலோ மாவு ரூ.300க்கு விற்பனை செய்கிறேன். புட்டு மாவு ஒரு கிலோ ரூ.360க்கும், கருங்குருவை அரிசி ஒரு கிலோ ரூ.100க்கும் விற்பனை செய்கிறேன். இது தவிர, கஞ்சி மாவும் விற்பனை செய்து வருகிறேன்.நான் விளைவிக்கிற அரிசி மற்றும் அதுகொண்டு தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்வதற்கு சமூக வலைத்தளங்களைப் பயன் படுத்தி வருகிறேன்.

அதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஏழு வகையான புண்ணாக்குகள் மற்றும் இயற்கை உரங்கள். இதுதான் எனது விவசாயத்திற்கு இடுபொருட்கள். பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கையான முறையில் உற்பத்தி செய்வதால், தரமான பொருட்களுக்குப் பெரிய அளவிலான மார்க்கெட்டிங் தேவையில்லை. பொதுவாக, இன்றைய காலகட்டங்களில் நல்ல பொருட்களுக்கு வரவேற்பு உள்ளது. அது எங்கிருந்தாலும் பொதுமக்கள் தேடிச் சென்று வாங்குகிறார்கள். என்னுடைய வாடிக்கையாளர்களில் 75% பேர் மீண்டும் மீண்டும் என்னிடம் பொருட்களை வாங்குபவர்களாக உள்ளனர். அவர்களுக்கான தேவையை நான் பூர்த்தி செய்தால் எனக்கு நல்ல லாபம் கிடைத்துவிடும். ஏற்கனவே என்னிடம் பொருட்கள் வாங்கியவர்கள் மூலம் பல புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கின்றனர். இதுபோன்ற காரணங்களால் நான் கூடுதலாக எந்த மார்க்கெட்டிங் முயற்சியும் எடுக்கவில்லை. இது நான் உற்பத்தி செய்யும் பொருட்களின் தரத்தினால் கிடைத்தது என்று நினைக்கிறேன்.எனக்கு அடிப்படையில் இயற்கை சார்ந்த விவசாயம் மிகவும் பிடிக்கும். முன்னாள் நெல்லை கலெக்டர் விஷ்ணு இருந்தபோது, அவரது முன்னெடுப்புகளால் நானும் பெரிய அளவில் இயற்கை விவசாயம் செய்ய முதன்முதலாக முயற்சி எடுத்தேன். அது இப்போதுவரை தொடர்ந்து வருகிறது. தற்போது நெல் மட்டுமின்றி, காய்கறி சாகு படியிலும் தொடர்ந்திருக்கிறேன். அரை ஏக்கரில் பச்சை மிளகாய், தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளை இயற்கை முறையில் பயிரிட்டுள்ளேன். இயற்கை விவசாயம் என்பது வெறும் ஒரு கனவு அல்ல, அது உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் சாத்தியப்படும் ஒரு லாபகரமான முயற்சி.

தொடர்புக்கு:

விஸ்வநாதன்: 99940 97319.