Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரஷ்யாவுடனான வர்த்தகத்தை நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு ‘நேட்டோ’ பகிரங்க எச்சரிக்கை: அமெரிக்காவும் சேர்ந்து மிரட்டுவதால் சவால்

லண்டன்: ரஷ்யாவுடன் வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டதால் 100% வரி விதிப்பு இருக்கும் என்று அமெரிக்காவுடன் இணைந்து இந்தியாவுக்கு ‘நேட்டோ’ பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டணி நாடுகளும் பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்குப் புதிய மற்றும் அதிநவீன ஆயுதங்களை (பேட்ரியாட் ஏவுகணைகள் உட்பட) வழங்கப்போவதாக சமீபத்தில் அறிவித்தார். அதோடு, ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு 50 நாட்கள் கெடு விதித்த டிரம்ப், ‘போர் நிறுத்த உடன்பாடு எட்டப்படாவிட்டால் ரஷ்யப் பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும்.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது இரண்டாம் நிலைத் தடைகள் விதிக்கப்படும்’ என்று கடுமையாக எச்சரித்தார். இதற்கு அமெரிக்காவின் 100 செனட்டர்களில் 85 பேர் ஆதரவு தெரிவித்துள்ளதால், இந்த விவகாரம் உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே, நேற்று அமெரிக்க செனட்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘நீங்கள் (இந்தியா, சீனா, பிரேசில்) ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து வருகின்றீர்கள்; அவர்களிடமிருந்து எண்ணெய், எரிவாயு வாங்கினால், அவர்கள் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை. அதனால் உங்கள் மீது 100% இரண்டாம் நிலைத் தடைகள் விதிக்கப்படும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இந்த எச்சரிக்கையை இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். உடனடியாக ரஷ்ய அதிபர் புதினை தொலைபேசியில் அழைத்து, அவரை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வரச் சொல்லி அழுத்தம் கொடுங்கள். இல்லையென்றால், அதன் விளைவுகள் உங்கள் நாடுகள் மீது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று அவர் வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளார். ரஷ்யாவின் முக்கிய வர்த்தக கூட்டாளிகளாக இருக்கும், இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் இருக்கும் நிலையில், நேட்டோவின் இந்த நேரடி எச்சரிக்கை இந்திய வெளியுறவுக் கொள்கைக்குப் பெரும் சவாலை உருவாக்கியுள்ளது.