Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாடு முழுவதும் டிஜிட்டல் கைது மோசடிகள் சிபிஐ விசாரிக்க அதிகாரம்: வங்கி அதிகாரிகளிடமும் விசாரணை; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: நாடு முழுவதும் அதிகரித்துள்ள டிஜிட்டல் கைது மோசடிகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த அதிகாரம் அளித்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. நாட்டில் டிஜிட்டல் கைது சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் ஏராளமானோர் பணத்தை இழந்து வருகின்றனர். இது தொடர்பாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: மூத்த குடிமக்களை ஏமாற்ற பல்வேறு சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் குறிவைத்ததன் மூலம் குற்றங்களின் தீவிரத்தையும், அதன் தீவிர தன்மையையும் அறிய முடிகிறது. டிஜிட்டல் கைது வழக்குகள் தொடர்பான விசாரணைகளில் சிபிஐக்கு விவரங்கள் மற்றும் ஒத்துழைப்பை ஏஐ தொழில்நுட்ப வல்லுநர்கள் வழங்க வேண்டும். வெளிநாடுகளிலிருந்து செயல்படும் சைபர் குற்றவாளிகளை கைது செய்ய இன்டர்போலின் உதவியையும் சிபிஐ பெற வேண்டும்.

தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் ஒரு பயனருக்கு அல்லது நிறுவனத்திற்கு பல சிம் கார்டுகளை வழங்காமல் இருப்பதை தொலைத்தொடர்பு துறை உறுதி செய்யவேண்டும். ஏனெனில் அவை சைபர் குற்றங்களில் பயன்படுத்தப்படலாம். குடிமக்களை ஏமாற்ற மோசடி செய்பவர்களுடன் கைகோர்த்து செயல்படும் வங்கி அதிகாரிகளை சிபிஐ விசாரிக்க வேண்டும். குடிமக்களை ஏமாற்றப் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளை முடக்க சுதந்திரம் உள்ளது. சைபர் மோசடி வழக்குகளில் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். இதை ஏன் ரிசர்வ் வங்கி இதுவரை பயன்படுத்தவில்லை என்பது எங்களுக்கு தெரியவில்லை. சைபர் குற்றங்களை கையாள்வது குறித்து ஒன்றிய உள்துறை, டிஓடி, நிதி உள்ளிட்ட பல்வேறு ஒன்றிய அமைச்சகங்களின் கருத்துக்களை கேட்க வேண்டும்.

இதுபோன்ற ஆன்லைன் டிஜிட்டல் கைது மோசடிகளை கையாள்வதற்கு மாநில சைபர் குற்ற தடுப்பு பிரிவின் மையங்களை அமைக்க வேண்டும். சைபர் குற்றங்களில் பயன்படுத்தக்கூடிய பல சிம் கார்டுகளை, வேறு பயனருக்கு வழங்குவதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். எதிர்க்கட்சி ஆளும் மேற்கு வங்கம், தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் டிஜிட்டல் கைது வழக்குகளை விசாரிக்க சிபிஐ அனுமதி வழங்க வேண்டும். நாடு தழுவிய டிஜிட்டல் கைது மோசடி வழக்குகளை சிபிஐ விசாரிக்க வேண்டும். இதற்கு அனைத்து மாநிலங்களும் சம்மதம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.