நாடு முழுவதும் பரவும் ‘டிஜிட்டல்’ மோசடி; பெங்களூரு, ஐதராபாத் டெல்லியில் 60% வழக்கு: ஒன்றிய உள்துறை அமைச்சகம் தகவல்
புதுடெல்லி: ‘டிஜிட்டல் கைது’ மோசடிகள் மூலம் நாடு முழுவதும் பெருநகரங்களில் வசிக்கும் மக்களே அதிகளவில் குறிவைக்கப்படுவதாக ஒன்றிய அரசின் சைபர் கிரைம் தடுப்புப் பிரிவு அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சைபர் குற்றவியல் ஒருங்கிணைப்பு மையம், நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ‘டிஜிட்டல் கைது’ மோசடிகள் குறித்து விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
இந்த ஆய்வின் முடிவில், நாட்டில் பதிவாகும் மொத்த வழக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு, அதாவது சுமார் 66% வழக்குகள் பெங்களூரு, ஐதராபாத் மற்றும் டெல்லி-என்.சி.ஆர். ஆகிய மூன்று பெருநகரங்களிலேயே பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த நகரங்களைத் தொடர்ந்து மும்பை, சூரத், புனே ஆகிய நகரங்களிலும் இந்த மோசடிகள் அடிக்கடி நடப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த மோசடியில் சிக்கும் நபர்களில் 76 சதவீதத்துக்கும் அதிகமானோர் 30 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்பதும், இதன் மூலம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் அல்லது சேமிப்பு உள்ளவர்களையே மோசடிக் கும்பல் குறிவைப்பதும் அம்பலமாகியுள்ளது.
இந்த மோசடிக் கும்பல்கள் பொதுவாக டெலிகிராம், வாட்ஸ்அப் போன்ற செயலிகள் மூலம் மக்களைத் தொடர்புகொண்டு, தங்களை காவல்துறை, சி.பி.ஐ., போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அல்லது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். பின்னர், ‘உங்கள் மீது வழக்கு உள்ளது, உங்களைக் கைது செய்யப் போகிறோம் அல்லது உங்கள் சொத்துக்களை முடக்கப் போகிறோம்’ என்று கூறி மக்களை அச்சத்திற்கு உள்ளாக்குகின்றனர். இந்த மிரட்டலுக்குப் பயந்து மிரண்டுபோன மக்களிடமிருந்து பெருந்தொகையை வங்கிக் கணக்குகள் மூலம் பறிக்கின்றனர். இந்த ‘டிஜிட்டல் கைது’ மோசடி நாடு தழுவிய பிரச்னையாக வளர்ந்துள்ளதால், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
 
 
   