சென்னை: 'எந்தவொரு ஜனநாயகத்திலும், அதிகாரத்தில் இருப்பவர்களால் நிறுவனங்கள் வளைக்கப்படலாம் அல்லது கைப்பற்றப்படலாம், ஆனால் பத்திரிகைகள் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சக்தியாக இருக்க வேண்டும்' என தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 ஆம் தேதி தேசிய பத்திரிகை தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஒரு ஜனநாயக நாட்டில் ஊடகங்களின் அத்தியாவசியப் பங்கையும், பொறுப்பான பத்திரிகைத் துறையின் தேவையையும் வலியுறுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப் போற்றப்படும் பத்திரிகைகள், நாட்டின் அனைத்துத் துறைகளிலும் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி, விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.
இந்த நாளில், பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும், பத்திரிகைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், போலிச் செய்திகளுக்கு எதிராகப் போராடுவதற்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களின் பொறுப்பு குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.
இந்நிலையில் தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; "எந்தவொரு ஜனநாயகத்திலும், அதிகாரத்தில் இருப்பவர்களால் நிறுவனங்கள் வளைக்கப்படலாம் அல்லது கைப்பற்றப்படலாம், ஆனால் பத்திரிகைகள் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சக்தியாக இருக்க வேண்டும்.
தேசிய பத்திரிகை தினத்தன்று, மத்திய பாஜக அரசின் சர்வாதிகாரத்திற்கு அடிபணிய மறுத்து, அதன் தோல்விகள், அதன் ஊழல் செயல்கள் மற்றும் அதன் வஞ்சகத்தை துணிச்சலுடன் வெளிப்படுத்தும் ஒவ்வொரு பத்திரிகையாளரையும் நான் பாராட்டுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.


