Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தேசிய தலைமை தொடர்ந்து புறக்கணிப்பு எதிரொலி தனிக்கட்சி தொடங்க அண்ணாமலை முடிவு? ஆதரவாளர்கள் ரசிகர் மன்றம் தொடங்கியதால் பரபரப்பு

சென்னை: பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமாலை தனிக்கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் அவருக்கு ரசிகர் மன்றம் தொடங்கியுள்ளனர். இதுகுறித்தெல்லாம் டிடிவி.தினகரனுடன் அவர் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜ தலைவராக இருந்த அண்ணாமலை இருந்தபோது ஏராளமான தலைவர்களை பதவியை விட்டு தூக்கினார். மேலிட செல்வாக்கோடு இருப்பவர்களை வீடியோ, ஆடியோ வெளியிட்டு பதவியை காலி செய்தார். தற்போது அவரால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் கட்சியில் முக்கிய பதவியை பிடித்தனர்.

ஏன் நயினாரை கூட அவர் ஒதுக்கி வைத்திருந்தார். ஒருமுறை அதிமுகவுக்கு ஆதரவாக பேட்டி கொடுத்தபோது, இனி அவர் பேட்டியே கொடுக்கக் கூடாது என்று தடை விதித்தார். தற்போது நயினார் நாகேந்திரனே தலைவராக வந்துள்ளதால், அண்ணாமலைக்கு நெருக்கடி அதிகரிக்க தொடங்கியது. அதோடு தேசிய தலைமையும் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் இருந்தபோது அவரும், முன்னாள் எம்பி தேஜஸ்யும் இணைந்து பல வேலைகளை செய்துள்ளதும், தற்போது அவர்கள் செய்த தவறுகள் எல்லாம் ஒன்றிய உள்துறை அமைச்சரின் கவனத்துக்கு சென்றால் கடும் அதிருப்தியில் அமித்ஷா உள்ளதாக கூறப்படுகிறது.

இது எல்லாம் தெரிந்து கொண்ட அண்ணாமலை, இனி பொறுமை காத்தால், கட்சியில் நாம் காணாமல் போய்விடுவோம் என்று கருதினார். இதனால் தொண்டர்களிடம் தான் இன்னும் செல்வாக்கோடுதான் இருப்பதாக காட்டிக் கொள்வதற்காகவும், தனது இருப்பை காட்டிக் கொள்வதற்காகவும் சில சித்து வேலைகளை அவர் தொடங்கியிருப்பதாக நயினாரின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கட்சித் தலைமையே அவரை ஒதுக்கி வைத்துள்ளது. இந்த நேரத்தில், அவர் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள டிடிவி.தினகரனை சந்தித்து கூட்டணியில் நீடிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், விரைவில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க இருப்பதாகவும் கூறினார். இதை தேசிய தலைமையே ரசிக்கவில்லை.

அதேநேரத்தில், அண்ணாமலை பாஜவில் இருந்து கொண்டே கூட்டணியை தோற்கடிக்கும் வேலைகளை தொடங்கியிருப்பதாக அமித்ஷாவிடம், எடப்பாடி பழனிசாமி புகார் செய்துள்ளார். அதை நிரூபிக்கும் வகையில்தான் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக கனவில் கூட ஏற்க முடியாது. அதற்கு பதில் தூக்கில் தொங்குவேன் என்று அறிவித்த டிடிவி.தினகரனை நேரில் சந்தித்துப் பேசியிருப்பது, அதிமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் வேண்டும் என்றே அண்ணாமலை, தினகரனை சந்தித்துப் பேசியது குறித்து அதிர்ச்சி தகவல்களை தெரிவிக்கின்றனர். இருவரும் தனியாக ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது யாரும் அருகில் இல்லை. ஆனால், வெளியில் கூட்டணிக்கு வரவேண்டும் என்று கூறிய அண்ணாமலை, தனி சந்திப்பில் எந்தக் காரணம் கொண்டும் கூட்டணிக்கு வரவேண்டாம். டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் இணைந்து தனி அணி அமைக்க அண்ணாமலை திட்டமிடுவது குறித்துத்தான் ஆலோசனை நடத்தியாக கூறப்படுகிறது.

குறிப்பாக தனிக்கட்சி தொடங்கி, கூட்டணியை ஏற்படுத்துவது, தேவைப்பட்டால், விஜய்யுடன் கூட்டணி வைப்பது என்று திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்துதான் அவர்கள் இருவரும் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. பாஜவின் கதவு மூடப்பட்டுள்ளதாலும், எடப்பாடி பழனிசாமியை பரம எதிரியாக பார்ப்பதாலும்தான் அவரையும், அவருடன் சேர்ந்து தனது பதவியை பறித்த பாஜவின் மேலிடத்ைத பழிவாங்குவதற்காக தற்போது இந்த புதிய முடிவை அண்ணாமலை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில் அண்ணாமலையின் ஆசியுடன் அவரது தீவிர ஆதரவாளரும் சேலம் மேற்கு மாவட்ட கலை, கலாச்சார பிரிவு மாவட்ட தலைவர் தங்கமணி, அண்ணாமலை பெயரில் ரசிகர் மன்றம் தொடங்கியுள்ளார். இந்த மன்றத்தை நேற்று தொடங்கி வைத்தது, சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஹரிராமன். பாஜவில் தனி நபர்களின் பெயரில் எந்த மன்றமும் வைப்பதில்லை. ஏன் மோடிக்கே கூட மன்றங்கள் கிடையாது. அப்படி இருக்கும்போது அண்ணாமலைக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்துள்ளதும், அதை ஒரு மாவட்ட தலைவரே சென்று தொடங்கி வைப்பதும், இந்தியாவில் எந்த மாநில பாஜவிலும் நடக்காத நிகழ்ச்சி என்கின்றனர் நயினாரின் ஆதரவாளர்கள்.

அண்ணாமலையின் ஆசியுடன்தான் இதுபோன்ற செயல்கள் நடப்பதாகவும், அவர் தனிக்கட்சி தொடங்குவதற்கு அச்சாரமாகத்தான் இந்த ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இவ்வளவு பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் வேண்டும் என்றே அண்ணாமலை இலங்கை சென்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அண்ணாமலை, நேற்று மாலை 4.40 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு புறப்பட்டு சென்றார். இதற்காக, நேற்று மாலை 3 மணி அளவில், அண்ணாமலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தார்.

அப்போது அவரிடம், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசும்போது, ‘இந்தியாவிலேயே அதிகமாக பேட்டி கொடுப்பது நான்தான். நீங்கள் இங்கேயே குடியிருந்து கொண்டு, ஒவ்வொரு முறை நான் வரும்போதும் பேட்டி கேட்கின்றீர்கள். நான் கொடுத்துக் கொண்டே இருக்க முடியுமா? நீங்கள் எல்லாம் சாப்பிட்டு விட்டீர்களா? சாப்பிட்டுவிட்டு, உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்று கூறிவிட்டு, அதற்கு மேல் எதுவும் கூறாமல் உள்ளே சென்று விட்டார்.

ஆனால், அண்ணாமலை தனிப்பட்ட பயணமாக, இலங்கை செல்வதாகவும் அவருடைய குடும்பத்தினர் ஏற்கனவே இலங்கைக்கு சென்று விட்டதாகவும், அண்ணாமலை குடும்பத்தினருடன் ஒரு வார காலம் இலங்கையில் தங்கி ஓய்வு எடுத்து விட்டு, மீண்டும் சென்னை திரும்புவார் என்றும் பாஜ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு வார காலம் ஓய்வில் இருக்கும் அவர் புதிய திட்டத்துடன்தான் சென்னை திரும்புவார் என்றும் பாஜவில் அடித்து கூறுகின்றனர். எப்படியோ அவர் இலங்கையில் இருந்து திரும்பி வரும்போது தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கும் என்கின்றனர் அண்ணாமலையின் ஆதரவாளர்கள்.