புதுடெல்லி: தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 3ம் தேதி அரசு பேருந்தும், சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 20 பேர் உயிரிழந்தனர். இதேப்போன்று நவம்பர் 2ம் தேதி ராஜஸ்தானில் நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் 18 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான செய்திகள் நாளிதழில் வெளியானதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருந்தது.இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் நீதிபதி விஜய் பிஷ்னோய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில்,‘‘தேசிய நெடுஞ்சாலைகளில் எத்தனை தாபாக்கள் அமைந்துள்ளது என்பதை இரண்டு வாரங்களில் மாநில அரசுகள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள தாபாக்கள் அங்கீகரிக்கப்படாத நிலையில், அங்கு செல்லும் மக்கள் அவர்களது வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் ஏற்படும் விபத்துக்களால் பிற வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் சமர்பிக்க வேண்டும். இதைத்தவிர நெடுஞ்சாலைகள் பராமரிப்பு மற்றும் பராமரிப்பின் போது ஒப்பந்ததாரர்கள் பின்பற்றும் விதிமுறைகள் உள்ளிட்டவற்றையும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கில் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஆகியோரையும் இந்த வழக்கில் ஒரு தரப்பாக சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

