தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைப்படி உயர் கல்விக்கு ஒரே ஆணையம்: யுஜிசி, ஏஐசிடிஇ, என்சிடிஇ வாரியங்கள் இனி கலைக்கப்படுகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்ய திட்டம்
புதுடெல்லி: தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைப்படி, உயர் கல்விக்கு ஒரே ஆணையம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்த, ஒரே குடையின் கீழ் அனைத்து வகையான உயர் கல்விகளும் கொண்டு வரப்பட வேண்டும் என 2020 தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) கீழும், பொறியியல் கல்லூரிகள் இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) கீழும், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் தேசிய கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) கீழும் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. இந்த 3 அமைப்புகளையும் கலைத்து உயர் கல்விக்கென தனி ஆணையம் அமைக்க வேண்டுமென்பதே தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரை.
இதற்காக யுஜிசி சட்டத்தை ரத்து செய்வதற்கும், உயர் கல்விக்கு என தனி ஆணையத்தை அமைப்பதற்கும் இந்திய உயர்கல்வி ஆணைய (பல்கலைக்கழக மானியக் குழுச் சட்டத்தை ரத்து செய்தல்) மசோதா தயாரிக்கப்பட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.இந்நிலையில், உயர் கல்வி ஆணைய மசோதாவை வரும் டிசம்பர் 1ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின. இந்த மசோதாவின் மூலம் யுஜிசி, ஏஐசிடிஇ, என்சிடிஇ ஆகிய 3 வெவ்வேறு உயர் கல்வி வாரியங்களும் கலைக்கப்பட்டு அதன் பணிகள் அனைத்தும் புதிய உயர் கல்வி ஆணையத்தின் கீழ் கொண்டு வரப்படும். ஆனாலும் மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகள் இதன் வரம்புக்குள் கொண்டு வரப்படாது.
உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், கற்பித்தல் முறை, மதிப்பீட்டு முறை, ஆராய்ச்சி ஆகியவற்றில் புதிய மைல்கற்களை உருவாக்குதல், ஆசிரியர் பயிற்சி, பாடத்திட்டங்களை மேம்படுத்துதல், மாணவர்களின் திறன் மேம்பாடு, ஆராய்ச்சிக்கு நிதி வழங்குதல் ஆகிய பணிகளை கவனிப்பது, குறிப்பிட்ட காலத்துக்குள் தங்களை மேம்படுத்தாத கல்வி நிறுவனங்களை மூடக் கோரி பரிந்துரை செய்தல் உள்ளிட்ட பணிகளை இந்திய உயர்கல்வி ஆணையம் மேற்கொள்ளும். இந்த ஆணையத்தில் ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர், 12 உறுப்பினர்கள், ஒரு உறுப்பினர் செயலர் இருப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
* 10 மசோதாக்கள் தாக்கல்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் டிசம்பர் 1ம் தேதி தொடங்கி டிசம்பர் 19ம் தேதி வரை 15 நாட்களுக்கு நடக்க உள்ளது. இதில் 10 முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு பட்டியலிட்டுள்ளது. உயர்கல்விக்கு தனி ஆணைய மசோதா தவிர, கார்ப்பரேட் சட்ட திருத்த மசோதா, தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க நிலம் கையகப்படுத்துதலை விரைவு படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
* வரும் 26ம் தேதி அரசியலமைப்பு தின விழா
நாடாளுமன்றம் கடந்த 1949ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக் கொண்டதை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ம் தேதி அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமை தாங்க உள்ளார். துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.


