சென்னை: இணையவழி குற்றப்பிரிவு மற்றும் தேசிய குற்றவியல் அறிவியல் பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்து தேசிய சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழாவை தொடங்கியது.
இந்த நிகழ்ச்சி இணையவழி குற்றப்பிரிவின் கூடுதல் காவல் இயக்குநர் டாக்டர். சந்தீப் மிட்டலால் பேராசிரியர் (டாக்டர்) தீபக் ராஜ் ராவ், ஒருங்கிணைப்பாளர், NFSU, சென்னை வளாகம் மற்றும் இணையவழி குற்றப்பிரிவு மற்றும் தேசிய குற்றவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் முன்னிலையில் தொடக்கப்பட்டது.
NFSU வளாக ஒருங்கிணைப்பாளராக உள்ள பேராசிரியர் (டாக்டர்) தீபக் ராஜ் ராவ் வரவேற்புரை நிகழ்த்தி, கல்வி திட்டங்கள், ஆய்வு முயற்ச்சிகள் மூலமாக நாட்டின் சைபர் கட்டமைப்பை மேம்படுத்துவதில் NFSU மேற்கொள்ளும் முக்கியப் பங்கைக் குறிப்பி டார்.
சிறப்பு விருந்தினர் இணையவழி குற்றப்பிரிவின் கூடுதல் காவல் இயக்குநர் டாக்டர். சந்தீப் மிட்டல் தனது முக்கிய உரையில், சைபர் சுகாதாரம், டிஜிட்டல் எழுத்தறிவு பற்றிய முக்கியத்துவம் மற்றும் தினமும் அதிகரிக்கும் சைபர் குற்றங்களை எதிர்கொள்ள தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவு மேற்கொள்ளும் முன்னோக்கிய முயற்சிகள்குறித்து உரையாற்றினார்.
கூடுதல் காவல் இயக்குநரின் தலைமையில் இயங்கும் இணையவழி குற்றப்பிரிவு தலைமையகத்தின் சைபர் ரோந்து குழு பணம் பறிக்கும் சைபர் மோசடிகளால் பாதிக்கப்பட்ட 428 நபர்களை மேலும் பணம் செலுத்தாமல் முன்கூட்டியே தடுத்தது. இதனால் சுமார் 1000 கோடி ரூபாய் பெரும் நிதி நஷ்டம் தடுக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு 1277 சைபர் நிதி மோசடி செய்யும் சமூக ஊடக பக்கங்கள் / கணக்குகளை முடக்கியுள்ளது.
மேலும் 2025 ஆம் ஆண்டில் சைபர் குற்ற வழக்குகளில் மொத்தம் 952 பேர் கைது செய்யப்பட்டு, 27 சைபர் குற்றவாளிகள் கூண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2 கட்டங்களாக நடத்திய ஆபரேஷன் திரைநீக்கு மூலமாக 212 பேரை கைது செய்ததும், நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆபரேஷன் ஹைட்ரா மூலம் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 7 பேரை கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது.
டாக்டர் சந்தீப் மிட்டல் NFSU மாணவர்களுக்கு "விழிப்புணர்வு உங்கள் சிறந்த பாதுகாப்பு" என்றும் நீங்கள் பகிரும் விஷயத்தில் நெறிமுறையுடன் இருக்கவும். தனியுரிமை என்பது டிஜிட்டல் உலகில் உங்கள் மிகச் சக்திவாய்ந்த கவசம்" என்றும் வலியுறுத்தி, சைபர் சுகாதாரத்தை கடைபிடிக்க மிகுந்த ஒழுக்கத்துடன் செயல்பட வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.
இந்த சந்தர்ப்பத்தில், சைபர் குற்றவியல் வழக்குகளை கண்டறிவதில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய காவல் அதிகாரிகளுக்கு, இணையவழி குற்றப்பிரிவின் கூடுதல் காவல் இயக்குநர், டாக்டர் சந்தீப் மிட்டல் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பண வெகுமதிகள் வழங்கினார்.பின்னர்பொதுமக்களுக்கு பின்வரும் அறிவுரைகளை வழங்கினார்.
பொதுமக்களுக்கு அறிவுரை:
காவல்துறை அல்லது ஏதேனும் அரசு நிறுவனத்திடமிருந்து அழைப்பதாக யாராவது கூறினால் பீதியடைய வேண்டாம். அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் அவர்களின் அடையாளத்தை எப்போதும் சரிபார்க்கவும்.
பணத்தை மாற்றவோ அல்லது முக்கியமான விவரங்களை (ஓடிபி, வங்கி தகவல், ஆதார் போன்றவை) பகிரவோ வேண்டாம்.
அலைபேசி அழைப்புகள் மூலம், காவல் துறையினர் பணம் கேட்கவோ அல்லது கைது செய்வதாக அச்சுறுத்தவோ மாட்டார்கள். 'டிஜிட்டல் கைது' என்று அழைக்கப்படும் ஒரு நடவடிக்கை காவல்துறையில் இல்லை.
உங்கள் வங்கிக் கணக்கு, சிம் கார்டு அல்லது டிஜிட்டல் அடையாளத்தை யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.
சந்தேகத்திற்கிடமான இணைப்புகள், அறியப்படாத வேலை வாய்ப்புகள் அல்லது ஆன்லைனில் முதலீட்டுத் திட்டங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
இதுபோன்ற மோசடிகள் குறித்து குடும்ப உறுப்பினர்களுக்கு, குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு கற்பிக்கவும்.
உங்கள் வங்கி மற்றும் மின்னஞ்சல் கணக்குகளில் இரண்டு காரணி அங்கீகாரத்தை(2FA)இயக்கவும்.
வலுவான, தனித்துவமான கடவுச்சொற்களைப் பயன்படுத்தவும். அவற்றை தவறாமல் புதுப்பிக்கவும்.
நீங்கள் சந்தேகத்திற்கிடமான அழைப்பைப் பெற்றால், உடனடியாக இணைப்பைத் துண்டித்து அதைப் புகாரளிக்கவும்.
அச்சுறுத்தலின் கீழ் பணம் கோரும் எந்தவொரு அழைப்பாளருடனும் ஈடுபடவோ அல்லது இணங்கவோ வேண்டாம்.
புகார் அளிக்க:
நீங்கள் ஏதேனும் இணையவழி குற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று நீங்கள் சந்தேகித்தால் அல்லது ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்டறிந்தால், உடனடியாக நடவடிக்கை எடுப்பது முக்கியம். நிதி மோசடிகள் ஏற்பட்டால் இணையவழி கிரைம் உதவி எண் 1930ஐ டயல் செய்யவும் அல்லது www.cybercrime.gov.in இல் புகார் அளிக்கவும்.