கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசியக் குழுமம் சங்பரிவாரின் அரசியல் கருவியாக மாறிவிட்டது: மமக தலைவர் ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு
சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா இன்று வெளியிட்ட அறிக்கை:கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசியக் குழுமம் தயாரித்துள்ள எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல், சங்க பரிவாரின் அரசியல் பரப்புரை குறிப்பாகவே எழுதப்பட்டுள்ளது. பாபர், அக்பர், அவுரங்கசீப் ஆகியோரது வரலாற்று நிகழ்வுகளை இழிவுபடுத்தி, உண்மை வரலாற்றை ஒரு கற்பனை கதையாக மாற்றியுள்ளனர். இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய ஹைதர் அலி மற்றும் திப்புசுல்தானின் வீரத்தையும் திட்டமிட்டே பாடநூலில் இடம் பெறச் செய்யவில்லை.
கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசியக் குழுமம் சங்பரிவாரின் அரசியல் கருவியாக மாறிவிட்டது என்பதற்கான சான்றாக இந்த பாடநூல் அமைந்துள்ளது. இந்தத் தவறான பாடநூல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய குழுமத்தின் நம்பகத்தன்மையைத் தகர்த்துள்ளது. வரலாற்றுத் திரிபுகள் நிறைந்த இந்த எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.