Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
South Rising
search-icon-img
Advertisement

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் விபத்துக்களை தடுக்க கோவில்பட்டியில் ரூ.4கோடி செலவில் உயர்கோபுர மின்விளக்கு, நடைமேம்பாலம் பணி

*விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கோவில்பட்டி : தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் விபத்துக்களை தடுக்க கோவில்பட்டியில் ரூ.4 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் உயர்கோபுர மின்விளக்கு மற்றும் நடைமேம்பாலம் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மதுரை அலகின் கட்டுப்பாட்டின் கீழ் திண்டுக்கல் முதல் கோவில்பட்டி வரையிலும், மதுரை முதல் நத்தம் வரையிலும், மேலூர் முதல் காரைக்குடி வரையிலும், திருமங்கலம் முதல் அழகாபுரி வரையிலும், மதுரை வெளிவட்ட சாலை முழுவதும் என மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை மாவட்டங்களில் 315 கிமீ தூரமுள்ள சாலைகள் பராமரிக்கப்படுகின்றன.

இந்நிலையில் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தூத்துக்குடி, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் உள்ள சாலைகளில், விபத்துக்களை தடுக்க மேம்பாலங்கள் மற்றும் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2015 முதல் 2019 வரையிலான நான்கு ஆண்டுகளில் விபத்துக்கள் அதிகம் நடந்த இடங்கள் மற்றும் அவற்றில் இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு, அங்கு மேம்பாலங்கள் கட்டவும், சந்திப்பை விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தோணுகால் சந்திப்பில் ரூ.74 லட்சத்தில் சாலை சந்திப்புடன் கூடிய உயர்கோபுர மின்விளக்குகள் மற்றும் சென்டர் மீடியன்கள் அமைப்பது, என்இசி (நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரி) சந்திப்பில் ரூ.3.30 கோடியில் நடைமேம்பாலம் மற்றும் மழைநீர் வடிகால்கள் கட்டுவது ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

போக்குவரத்தும் சீராகும்

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரிகள் கூறுகையில், விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விபத்துகள் அதிகம் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு உயர்மின் கோபுரம், நடைமேம்பாலம், மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரி, லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகள் முன்பு உள்ள மழைநீர் வடிகால் ஓடையை சீரமைத்து மூடி (கான்கிரீட்) போடும் பணிகள் நடைபெறுகின்றன. இதன்மூலம் நாலாட்டின்புதூர், மொட்டமலை பகுதியில் இருந்து வரும் மழைநீர் எளிதாக இந்த ஓடை வழியாக ஆலம்பட்டி கண்மாய்க்கு சென்று சேரும். அப்பகுதியில் போக்குவரத்தும் சீராக நடைபெறும் என்றனர்.