தேசிய அவசரநிலையைச் சமாளிக்கவே, இந்தியாவிற்கு எதிராக வரிகளை விதித்தோம்: அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் ட்ரம்ப் நிர்வாகம் மேல்முறையீடு
வாஷிங்டன்: தேசிய அவசரநிலையைச் சமாளிக்கவே, இந்தியாவிற்கு எதிராக வரிகளை விதித்தோம் என அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் ட்ரம்ப் நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளுக்கு எதிராக கடும் இறக்குமதி வரிகளை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விதித்துள்ளார். பல மடங்கு உயர்த்தப்பட்ட சீனா மீதான வரியை பேச்சுவார்த்தைக்குப் பின் அவர் குறைத்தார். அதேவேளையில், இந்திய பொருட்களுக்கு ஏற்கெனவே 25 சதவீத வரி விதித்த ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி கூடுதலாக 25 சதவீதம் வரியை விதித்து, மொத்த வரிவிதிப்பு 50% ஆக அவர் உயர்த்தினார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இத்தகைய நடவடிக்கைகளால் அமெரிக்காவுக்கான இறக்குமதி பாதிக்கப்படும், உள்நாட்டில் பொருட்களின் விலை உயரும், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று அமெரிக்க மக்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில், இந்த வரி விதிப்பு முடிவுகளுக்கு எதிராக கடந்த மே மாதம் நியூயார்க் வர்த்தக நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து அமெரிக்க கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு மேல்முறையீடு செய்திருந்தது.
மேல்முறையீட்டு நீதிமன்றம் தற்போது அளித்த தீர்ப்பில், “உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கு எதிராகவும் அதிபர் ட்ரம்ப் அதிக வரிகளை விதித்துள்ளார். இதை நியாயப்படுத்தவே, தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப்பின் பெரும்பாலான வரிவிதிப்புகள் சட்டவிரோதமானவை. எனவே, கூடுதல் வரி விதிப்பை நீக்க வேண்டும்.வரிகள் விதிப்பு என்பது அடிப்படையில், நாடாளுமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அது, வரிவிதிப்பில் அதிபருக்கு சில அதிகாரங்களை மட்டுமே நாடாளுமன்றம் வழங்கி உள்ளதை நினைவில் கொள்ளவேண்டும். எனினும், வரம்பற்ற அதிகாரத்தை அதிபருக்கு அமெரிக்க நாடாளுமன்றம் வழங்கவில்லை. அத்தகைய நோக்கத்தை அமெரிக்க நாடாளுமன்றம் கொண்டிருக்கவில்லை” என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் நியூயார்க் வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்பை, ஏறக்குறைய கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது. அதேநேரத்தில், மேல்முறையீடு செய்வதற்கு வரும் அக்டோபர் 14 வரை கால அவகாசத்தையும் அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் முறையீடு செய்ய உள்ளோம். இந்த சவாலில் அமெரிக்கா இறுதியில் வெற்றி பெறும். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நாங்கள் நீதிமன்றத்தில் இந்த சவாலை எதிர்கொள்வோம்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார்.இந்த நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது விதிக்கப்பட்ட வரிகள் சட்டவிரோதமானவை' என்ற அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் ட்ரம்ப் நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள தேசிய அவசரநிலையைச் சமாளிக்கவே, ரஷ்ய எண்ணெயை வாங்கும் இந்தியாவிற்கு எதிராக வரிகளை விதித்தோம் எனவும் வாதம் வாதம் வைக்கப்பட்டது வருகிறது.