செங்கல்பட்டு: செங்கல்பட்டில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலை பள்ளியில் தேசிய மாணவர் படை மாணவர்களால் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளியின் தேசிய மாணவர் படை முதன்மை அதிகாரி முனைவர் சச்சிதானந்தம் மற்றும் செல்வம் ஆகியோரின் ஏற்பாட்டில் மருத்துவர் பதி, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு தகவல்களை மாணவர்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட கல்விஅலுவலர், பள்ளி தாளாளரும் தலைமை ஆசிரியருமான ஜோசப் ஆண்டனி பாலன் ஆகியோர் பங்கேற்றனர். செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி, தேசிய மாணவர் படையின் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சுமார் 200 மாணவர்கள் பங்கேற்று புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு செங்கல்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தனர்.

