Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தேசிய வாழை ஆராய்ச்சி மையம்

நாம் பொழுதுபோக்குக்காக நம் பிள்ளைகளை பல இடங்களுக்கு அழைத்துச் செல்கிறோம். அப்படி அழைத்துச் செல்லும்போது வெறும் பொழுதுபோக்காக காலத்தை கழிக்காமல் பயனுள்ள தகவல்களை பொது அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் சில இடங்களைத் தேர்வு செய்து அழைத்துச்செல்ல வேண்டும். அந்த வகையில் தேசிய வாழை ஆரய்ச்சி மையத்துக்கு அழைத்துச் சென்றால் உங்கள் பிள்ளைகள் பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ள முடியும்.

மத்திய அரசின் விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் திருச்சியில் செயல்பட்டு வருகிறது. சுமார் 100 ஏக்கரில் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் உள்ள பூச்சி தாக்காத அதிக மகசூல் தரக்கூடிய வாழை இலை ஆராய்ச்சி செய்து 350 பல்வேறு வகையான வாழை சாகுபடி யையும், அதன் கன்றுகளையும் விவசாயிகளுக்கு இந்த மையம் அளித்து வருகிறது. முக்கியமாக சாகுபடி செய்யப்படும் வாழைகளில் இருந்து பல்வேறு விதமான பொருட்களை உற்பத்தி செய்து மகளிர் சுய உதவி குழுவிற்கும், தொழில் முனைவோர்களுக்கும் பயிற்சிகளையும் அளித்துவருகிறது.

அதாவது, வாழையிலிருந்து கிடைக்கும் வாழைநாரில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பது, வாழைக்காயில் இருந்து மாவு தயாரித்து அந்த மாவிலிருந்து பாஸ்தா, வாழைமாவு ஊட்டச்சத்து பானம், வாழைப்பழத்தில் இருந்து ஜூஸ், ஒயின், வாழைப்பழ பவுடர்,சிப்ஸ் என வாழைமரத்தை மதிப்புக் கூட்டி 40க்கும் அதிகமான உணவு மற்றும் கைவினைப் பொருட்களை தயாரித்து வருகிறது. அதோடு வாழை சாகுபடிக்கு தேவையான நுண்ணூட்டச் சத்து உரங்கள், விவசாயிகளுக்குப் பயிற்சிகள் என‌ எக்கச்சக்கமான வேலைகளைச் செய்து வருகிறது‌.

இந்த தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (National Research Center for Banana - NRCB) இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் பரிந்துரையின்படி 1993 ஆகஸ்ட் 21ஆம் தேதி திருச்சி தாயனூர் அருகே உள்ள போதாவூர் என்ற ஊரில் தொடங்கப்பட்டது. இது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் ஒரு பிரிவாகும். வாழையின் மகசூல் பெருக்கம் மற்றும் ஊட்டச்சத்து பெருக்கம் இதன் முக்கிய அம்சங்கள் ஆகும். இந்த மையம் பயிர் மேம்படுத்துதல் பிரிவு, பயிர் பெருக்கப் பிரிவு, பயிர் காப்பியல் பிரிவு, அறுவடை செய்த பின் மேம்பாடுகள் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவும் அதற்குரிய குறிப்பிட்ட ஆராய்ச்சிகளை இன்றளவும் செய்து வருகிறது.

இந்த ஆராய்ச்சி மையம் சில மேம்படுத்தப்பட்ட ஆய்வகங்களைக் கொண்டுள்ளது. அதில் ஒருசில ஆய்வகங்கள் பின்வருமாறு திசு வளர்ப்பு ஆய்வகம், உயிர்த் தொழில் நுட்பவியல் ஆய்வகம், மண் அறிவியல் ஆய்வகம், உயிர்வேதியியல் ஆய்வகம், பூச்சியியல் ஆய்வகம், நேமதொடி ஆய்வகம், பூஞ்சை மற்றும் பாக்டீரியா சம்பந்தப்பட்ட ஆய்வகம் போன்றவை அடங்கும்.

தேசிய வாழை ஆராய்ச்சி மைய கண்டு பிடிப்பு: இந்த மையம் வாழைக்கு என நுண் சத்துக்கள் கொண்ட தாவர வளர்ச்சி ஊக்கி ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இதற்கு, “வாழை சக்தி”என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த தாவர வளர்ச்சி ஊக்கியில் ஜின்க், இரும்பு, போரோன், செம்பு போன்ற தாதுக்கள் மட்டுமில்லாமல் மற்ற நுண் சத்துகளும் நிறைந்துள்ளன.

ஆராய்ச்சி நிலையத்தின் முக்கிய பணிகள்: வாழை உற்பத்தி மற்றும் பயன்பாட்டினை அதிகரிக்கத் தக்க தொழில்நுட்பங்களை மேம்படுத்த அடிப்படை ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல். பழங்கால மற்றும் உயிர்த் தொழில்நுட்ப முறைகளிலிருந்து மேம்படுத்தப்பட்ட ரகங்களை உருவாக்குதல் மற்றும் வேறுபாடுகளைப் பராமரித்தல். வாழை பற்றிய அனைத்துத் தகவல்களுக்கும் களஞ்சியமாகவும் உற்பத்தித்திறன் மற்றும் மகசூல் அளவை அதிகரிக்கும் தகவல்களைப் பரப்பவும்,தேசிய வாழை பண்பகப் பண்ணையாகவும் செயல்படுகிறது.