கோவை: கடலூரை சேர்ந்தவர் சாரங்கபாணி (67). வரலாற்று ஆய்வாளருமான இவர், நாம் தமிழர் கட்சி ஆதரவாளராகவும் இருந்து வருகிறார். இவர், கடந்த 7ம் தேதி தனியார் யூடியூப் சேனல் ஒன்றில், பெரியார் குறித்தும், திராவிடர் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் வழக்கறிஞர் மதிவதனியை குறித்தும் அருவருக்கதக்க வகையிலும் ஆபாசமாக பேசி இருந்தார். இதையடுத்து பெரியாரையும் பெண்ணினத்தையும் இழிவுபடுத்திய சாரங்கபாணியை உடனடியாக கைது செய்ய கோரி பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பல்வேறு மாவட்டங்களில் புகார் அளித்து வந்தனர்.
அதேபோல், கோவையை சேர்ந்த வழக்கறிஞரும், திராவிடர் கழகத்தின் கோவை மாவட்ட செயலாளருமான பிரபாகரன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து, ரேஸ்கோர்ஸ் போலீசார் ஓசூரில் இருந்த சாரங்கபாணியை நேற்று கைது செய்தனர். அவரை கோவை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.