இருமாநில போலீஸ் அணிவகுப்புடன் முன்னுதித்த நங்கை அம்மன் திருவனந்தபுரத்துக்கு புறப்பாடு: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
சுசீந்திரம்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் தமிழக கேரள மாநில போலீஸ் அணிவகுப்புடன் முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் திருவனந்தபுரம் புறப்பட்டது. நவராத்திரி விழாவையொட்டி ஆண்டுதோறும் குமரி மாவட்டத்தில் இருந்து சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரம் எடுத்து செல்லப்படுவதும், அங்கு பூஜையில் வைக்கப்படுவதும் வழக்கம். இதன்படி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை குமாரசுவாமி, பத்மநாபபுரம் அரண்மனை தேவாரக்கெட்டு சரஸ்வதி தேவி விக்ரகங்கள், உடைவாள், வெள்ளிக்குதிரை ஊர்வலமாக எடுத்து செல்லப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை புறப்படும் நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்றது. முன்னதாக நிகழ்ச்சியையொட்டி இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி ஸ்ரீ சக்கரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதையடுத்து காலை 9.15 மணிக்கு முன்னுதித்த அம்மன் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி திருவனந்தபுரம் நோக்கி புறப்பட்டார். அப்போது கோயிலில் இருந்த தமிழக, கேரள மாநில போலீசார் பேண்டு வாத்தியங்கள் முழங்க அம்மனுக்கு மரியாதை செலுத்தி புறப்பாட்டை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து பல்லக்கு தாணுமாலயன் சுவாமி கோயில் ரதவீதி வழியாக சென்றது. அப்போது முன்பு பெண்கள் முத்துக்குடை பிடித்தவாறு ஊர்வலமாக சென்றனர். ரதவீதியில் இருபுறமும் திரண்டு நின்ற மக்கள் பூக்களை தூவி அம்மன் புறப்பாட்டை வரவேற்றனர். பக்தர்களில் சிலர் கற்பூரம் ஏற்றியும், பழங்கள் வைத்தும் பூஜைகள் செய்தனர். இதையடுத்து முன்னுதித்த அம்மன் பல்லக்கு திருவனந்தபுரம் செல்லும் வழியில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனைக்கு புறப்பட்டு சென்றது.
பின்னர் அரண்மனையில் உள்ள உப்பரிக்கை மாளிகையில் உடைவாள் கைமாறுதல் மற்றும் ஊர்வலம் புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 22ம் தேதி மாலை 6.30 மணிக்கு திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் நவராத்திரி மண்டபத்தை பல்லக்கு சென்றடைகிறது.