Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெயர் பலகை வைப்பதில் தகராறு இருதரப்பு மோதல்; கல் வீச்சு போலீசார் உட்பட 7 பேர் காயம்: பரமக்குடி அருகே மறியல்

பரமக்குடி: இளையான்குடி அருகே பெயர் பலகை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினர் மோதிக் கொண்டனர். இதில் 2 போலீசார் உட்பட 7 பேர் காயமடைந்தனர். கல்வீசி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி, பரமக்குடியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே இளமனூர் கிராமத்தில் ஒரு தரப்பினர் தனது சமூக தலைவரின் படத்துடன் ஊர் பெயர் பலகை வைத்துள்ளனர். இதனால் கோபம் அடைந்த மற்றொரு தரப்பினர், சம்பவ இடத்திற்கு சென்று, ‘பெயர் பலகையை உடனடியாக அகற்ற வேண்டும்’ என தகராறில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, மற்றொரு தரப்பினர் போலீசாரை மீறி, பெயர் பலகை வைத்த தரப்பினர் மீது கம்பு மற்றும் கற்களால் பயங்கரமாக தாக்கினர். இதில் 2 போலீசார் உட்பட 7 பேர், தலை மற்றும் உடலில் காயம் ஏற்பட்டு ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்தை கண்டித்து பரமக்குடி ஐந்து முனைச்சாலையில் இளமனூர் கிராமத்தில் சாதி ரீதியாக தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய கோரி 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் பரமக்குடி டிஎஸ்பி சபரிநாதன் தலைமையிலான போலீசார், போராட்டம் நடத்தியவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் அவர்கள் காட்டுபரமக்குடி, மணி நகர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்றொரு தரப்பினர் நயினார்கோவில், பெருமச்சேரி, நேதாஜி நகர் ஆகிய பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பதற்றத்தை தொடர்ந்து பரமக்குடி, இளமனூரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.