நாமக்கல் கூட்டத்தில் விஜய் வாகனத்தை நிறுத்தி வேண்டுமென்றே காலதாமதம் செய்தனர்: காவல்துறை வழங்கிய 20 நிபந்தனைகளை மீறியதால் மாவட்ட செயலாளர் சதீஷ் மீது வழக்குப்பதிவு
சென்னை: காவல்துறை வழங்கிய 20 நிபந்தனைகளை மீறியதாக நாமக்கல் மாவட்டத்தில் தவெக மாவட்ட செயலாளர், பொதுச்செயலாளர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ள எப்ஐஆர் விவரம்: நாமக்கல் சரகம் நாமக்கல் - சேலம் சாலையில் கே.எஸ்.தியேட்டர் அருகே தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 27ம் தேதி காலை 7 மணி முதல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு பாதுகாப்பு அலுவலில் உதவி ஆய்வாளர் சாந்தகுமார் ஆகிய நான் பணியில் இருந்தேன்.
நாமக்கல் மாவட்டம் தவெக மேற்கு மாவட்ட செயலாளர் சதீஷ் அவரது கட்சியின் தலைவர் விஜய், நாமக்கல் மாவட்டத்தில் 27ம் தேதி மக்கள் சந்திப்பு பரப்புரை செய்ய அனுமதி கேட்டு கொடுத்த விண்ணப்பத்தின் அடிப்படையில், நாமக்கல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் 25த் தேதி அன்று வழங்கிய செயல்முறை ஆணையின்படி 20 நிபந்தனைகளுடன் இன்று (27ம் தேதி) காலை 11 மணி முதல் 12 மணி வரை நாமக்கல் மாவட்ட, சேலம் ரோடு கே.எஸ்.தியேட்டர் அருகில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு, நாமக்க்ல மாவட்டம் எஸ்பி மேற்பார்வையில் கூடுதல் எஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என மொத்தம் 250 காவலர்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீர்செய்யும் பணிக்கு நியமிக்கப்பட்டு நாமக்கல் மாநகர மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டது.
இந்நிலையில் 27ம் தேதி காலை 9 மணிக்கு பல்வேறு தொலைக்காட்சிகளில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பகல் 12 மணிக்கு நாமக்கல்லுக்கு பரப்புரைக்கு வர இருப்பதாக சொன்னதை தொடர்ந்து காலை 7 மணியிலிருந்து பொதுமக்கள் மற்றும் அக்கட்சி தொண்டர்கள் நாமக்கல் - சேலம் ரோடு, மெயின் ரோடு, திருச்சி ரோடு, ரமேஷ் தியேட்டர், நாகராஜபுரம் ஆகிய இடங்களில் கூட்டம் அதிகளவில் வர தொடங்கினார்கள். அக்கட்சியின் தலைவர் விஜய் நாமக்கல் மாவட்ட எல்லையான மேட்டுபட்டி, வளையப்பட்டி, புதுப்பட்டி, நாகராஜபுரம், ரமேஷ் தியேட்டர் மெயின் ரோடு வழியாக நுழைந்து வேண்டுமென்றே கால தாமதம் செய்து பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடைஞ்சல் ஏற்படுத்தி அதிக இடங்களில் நிபந்தனைகளை மீறியும் பரப்புரை நடத்த அனுமதி வழங்கப்பட்ட இடமான கே.எஸ்.தியேட்டர் முன்பு மதியம் 2.45 மணக்கு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்திற்கு நடுவே பரப்புரை வாகனத்தை நிறுத்தி, வேண்டுமென்றே காலதாமதம் செய்ததால், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தனர்.
அதனால் அந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் அலைமோதி, மக்களிடையே தேவையற்ற எதிர்ப்பை ஏற்படுத்தியும், அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டு கூட்ட நெரிசலால் மூச்சி திணறல், கொடுங்காயம், உயிர் சேதம் ஏற்படும் என்று தவெக கட்சியின் மாவட்ட செயலாளர் சதீஷ் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரிடமும், தவெக நிர்வாகிகள் பலரிடமும் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் அதிகாரிகளும் நானும் பல முறை எச்சரித்தும், அறிவுரை வழங்கியும் நாங்கள் சொன்னதை கேளாமல் தொடர்ந்து அசாதாரண செயலில் ஈடுபட்டதால், போலீசாரால் போதிய பாதுகாப்பு வழங்கிய போதும், தவெக தொண்டர்களும், மாவட்ட செயலாளர் சதீஷ்ம் மற்றும் நிர்வாகிகள் எவரும் தொண்டர்களை சரிவர ஒழுங்குபடுத்தாமல் அருகில் உள்ள டாக்டர் ஷியாமளா பல் மருத்துவமனை பெயர் பலகையில் ஏறி அதிலிருந்து தொண்டர்கள் பெயர் பலகையுடன் சரிந்து கீழே நின்றிருந்த பொதுமக்கள் மீது விழுந்ததில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.
தமிழக வெற்றி கழக கட்சியின் நாமக்கல் மாவட்ட ஏற்பாட்டாளர்களுக்கு விஜய் பரப்புரை கூட்டம் காலை 11 மணி முதல் 12 மணி வர காவல்துறை அனுமதி வழங்கப்பட்டிருந்தும், குறிப்பட்ட நேரத்தில் பரப்புரை நிகழ்ச்சி நடத்த கட்டாய நிபந்தனை இருந்த போதிலும், அதிக மக்கள் கூட்டத்தை வெளிப்படுத்த அரசியல் பலத்ததை பறை சாற்றும் நோக்கத்துடன் அக்கட்சியின் ஏற்பாட்டாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் நாமக்கல் வருவதை 4 மணி நேரம் தாமதப்படுத்தியும், அந்த நீண்ட தாமதத்தின் காரணமாக அங்கு பல மணி நேரங்களாக காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெயிலிலும், தாகத்திலும் சேர்வடைந்தனர். நீண்ட நேரம் காத்திருப்பு போதுமான தண்ணீர் மற்றம் மருத்துவ வசதி இல்லாமல் கூட்டம் காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தால் மக்களின் உடல் நிலையில் சேர்வடைவு ஏற்பட்டது. பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். மாலை 6மணிக்கு அலுவல் முடிந்து நிலையம் வந்து மேற்படி சம்பவம் தொடர்பாக நாமக்கல் காவல் நிலையத்தில் குற்ற எண்: 489\\\\\\\\2025 பிஎன்எஸ் சட்டம் 189(2), 126(2), 292, 285 ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ப்பட்டது.