நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் இன்று, நாளை என 2 நாட்கள் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார். கரூர் மாவட்டத்தில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து மாநில நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதனால், நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 5 மற்றும் 6ம் தேதிகளில் நடைபெற இருந்த எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்திற்கு நாமக்கல் மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இதையடுத்து, தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் பிரசார கூட்டத்தை நடத்த அதிமுகவினர் முடிவு செய்து அதற்கான இடங்களை தேர்வு செய்து தற்போது காவல்துறையிடம் அனுமதி பெற்று விட்டனர்.
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் கரட்டுப்பாளையத்தில் இன்று மாலை 5 மணிக்கும், குமாரபாளையத்தில் சாணார்பாளையம் பகுதியில் இரவு 7 மணிக்கும், நாமக்கல் தொகுதியில் ஏ.எஸ்.பேட்டை, பரமத்திவேலூர் தொகுதியில் பாண்டமங்கலம் ஆகிய இடங்களில் நாளையும் (9ம் தேதி) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார கூட்டங்கள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் செய்துள்ளனர்.