சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு அரசு டைடல் பார்க் அமைக்க உள்ளது. இங்கு டைடல் பார்க் அமைக்கப்பட்டால் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும். எனவே இதை கண்டித்தும்;
இத்திட்டத்தை வேறு இடத்தில் செயல்படுத்திட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் வரும் 17ம்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில், ராசிபுரம் ஆண்டகலூர் கேட், திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரில், அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
