* துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்
* ராஜேஸ்குமார் எம்பி தகவல்
நாமக்கல் : நாமக்கல்லில் நாளை நடைபெறும் அரசு விழாவில், 2001 பயனாளிகளுக்கு ரூ.33.18 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகளை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார் என ராஜேஸ்குமார் எம்பி தெரிவித்தார்.தமிழ்நாடு துணை முதல்வரும், திமுக இளைஞர் அணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், நாளை (10ம் தேதி), நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இதை யொட்டி, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராஜேஸ்குமார் எம்பி நேற்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாளை நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக துணை முதலமைச்சர் இன்று (9ம் தேதி) கரூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று விட்டு, சாலை மார்க்கமாக மாலையில் நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை புரிகிறார்.
நாளை காலை 10 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்த அரசுத்துறை அதிகாரிகள் அடங்கிய ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள 139 பணிகளுக்கு ரூ.87.38 கோடியில் அடிக்கல் நாட்டியும், ரூ.10.80 கோடி மதிப்பில் முடிவடைந்த 36 திட்டப்பணிகளை திறந்து வைத்தும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மாவட்ட தொழில் மையம், தொழிலாளர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 2001 பயனாளிகளுக்கு ரூ.33.18 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், விழா பேருரையாற்றுகிறார்.
மேலும், நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம் ஆகிய நகராட்சிகள் மற்றும் நகராட்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருப்பவர்களுக்கு, முதற்கட்டமாக பட்டாக்கள் மற்றும் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கவுள்ளார்.
நாளை மாலை 3 மணியளவில், மாவட்ட விளையாட்டு அரங்கில் நவீன விளையாட்டு உடற்பயிற்சி கூடத்தை துணை முதல்வர் திறந்து வைக்கிறார். தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளை சந்தித்து கலந்துரையாடுகிறார்.
விழாவில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், அரசு கூடுதல் செயலாளர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு ராஜேஸ்குமார் எம்பி தெரிவித்தார்.
அப்போது, மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி, மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, மாவட்ட எஸ்பி ராஜேஸ் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் சாந்தி, சுகந்தி ஆகியோர் உடனிருந்தனர்.