*இரவில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு
நாமக்கல் : நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள புறக்காவல் நிலையம் பூட்டியே கிடப்பதால், இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து டவுன் பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அதே வேளையில் திருச்சி, துறையூர், மோகனூர், சேந்தமங்கலம் போன்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள், பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்கின்றன. இந்த பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்டின் வெளிப்புறம் வழியாக செல்கிறது.
இதனால், இரவு நேரங்களில் மக்கள் பஸ்சுக்காக பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் காத்திருக்கின்றனர். ஆனால், புறக்காவல் நிலையத்தில் பகலில் கூட போலீசார் இருப்பதில்லை. இரவு நேரத்தில் அந்த பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 2 அரசு மதுக்கடைகள் உள்ளன. இரவு நேரங்களில் அப்பகுதியில் போதை ஆசாமிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவர்கள் தனியாக நிற்கும் பயணிகளிடம் அத்துமீறி வருகின்றனர்.
மேலும், போதையில் மட்டையாகும் நபர்களிடமிருந்து பணம், செல்போனை பறித்துச் செல்கின்றனர். இதற்கு பயந்து பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைக்காரர்கள் இரவு 9 மணிக்குள் கடையை அடைத்து விட்டு சென்று விடுகின்றனர். பெயரளவுக்கு மட்டும் உள்ள புறக்காவல் நிலையத்தை செயல்பட காவல்துறை உயரதிகரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
