Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் டிரைவர், கண்டக்டர்களுக்கு கழிப்பிட கட்டணம் நிர்ணயம்

*மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

நாமக்கல் : நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில், கட்டண கழிப்பிட பிரச்னையால், டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு கட்டண நிர்ணயம் செய்து மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.நாமக்கல் மாநகராட்சி, முதலைப்பட்டியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கடந்த ஆண்டு நவம்பர் முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு பொதுமக்கள் மற்றும் பயணிகள் வசதிக்காக 3 கட்டண கழிப்பிடங்களில், மாநகராட்சி கட்டி தனியாருக்கு டெண்டர் விட்டுள்ளது.

புதிய பஸ் ஸ்டாண்டில், கடந்த ஒரு ஆண்டாக 3 கட்டண கழிப்பிடங்களும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வரும் பொதுமக்களின் கூட்டம் குறைந்து விட்டதால், கட்டண கழிப்பிடத்தை நடத்த முடியவில்லை எனக் கூறி டெண்டர் எடுத்தவர், இரண்டு கட்டணம் கழிப்பிடங்களை கடந்தவாரம் திடீரென பூட்டினார். இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், கட்டண கழிப்பிடங்களை உடனடியாக திறக்கும்படி டெண்டர் எடுத்தவருக்கு அறிவுறுத்தினார்.

இதையடுத்து கமிஷனரின் அறிவுரைப்படி, கட்டண கழிப்பிடங்கள் திறக்கப்பட்டது.நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட்டுக்கு வரும் அனைத்து பஸ்களும், முதலைப்பட்டி பைபாஸ் பகுதியில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கிறது. இதனால் புதிய பஸ் ஸ்டாண்ட்டுக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால் போதுமான வருவாய் இல்லை.

மேலும் கட்டண கழிப்பிடத்தில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்ககூட வசூல் ஆவதில்லை. அரசு மற்றும் தனியார் பஸ்களில் வரும் டிரைவர்கள் கண்டக்டர்கள், கட்டண கழிப்பிடத்தை பயன்படுத்திவிட்டு கட்டணம் தர மறுக்கிறார்கள். இதனால் நஷ்டம் ஏற்படுகிறது. என டெண்டர் எடுத்தவர் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டார்.

இதையடுத்து புதிய பஸ் ஸ்டாண்ட்டை மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். பஸ்கள் பயணிகளை எங்கிருந்து இறக்கி விடுகிறது என்பது குறித்து விபரங்களை சேகரித்தனர்.

இந்த பிரச்னை குறித்து, மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், சேலம், திருச்சி, கும்பகோணம், திண்டுக்கல், மதுரை, கோவை, தர்மபுரி, ஈரோடு ஆகிய அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்கள் மற்றும் நாமக்கல், ராசிபுரம் திருச்செங்கோடு, சங்ககிரி, ஈரோடு, சேலம் பகுதியில் உள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஆகியோருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிட உரிமத்தை பொது ஏலம் மூலம் உரிமம் பெற்று பொன்னுசாமி என்பவர் நடத்தி வருகிறார். அவர், புதிய பேருந்து நிலையத்திற்குள் தினமும் சராசரியாக 200 அரசு பேருந்துகள் வந்து செல்வதாகவும் பேருந்தின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் 400 பேர் கட்டணம் கழிப்பிடத்தை தினமும் இலவசமாக பயன்படுத்துவதால் ரூ. 2000 நஷ்டம் ஏற்படுவதாகும் கூறியுள்ளார்.

மேலும் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கட்டணம் செலுத்தி கழிப்பிடத்தை பயன்படுத்தினால் ஏற்படும் நஷ்டத்தை சரி செய்ய இயலும் என தெரிவித்துள்ளார்.

இதுவரை டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் கட்டண கழிப்பிடத்திற்கு உரிய கட்டணங்கள் செலுத்துவதில்லை.

எனவே தங்கள் பணிமனையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் அனைவரிடமும் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டும் மாநகராட்சி நிர்ணயம் செய்யப்பட்ட ரூ. 5 செலுத்தி கட்டணகழிப்பிடத்தை பயன்படுத்த அறிவுறுத்தவேண்டும். இவ்வாறு கமிஷனர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.இதையடுத்து டெண்டர் எடுத்தவர்கள், இந்த மாநகராட்சி கமிஷனரின் கடிதத்தை, கட்டண கழிப்பிடத்தின் முகப்பில் ஒட்டி வைத்துள்ளனர்.