கடலூர்: நாமக்கல், கரூரை தொடர்ந்து கடலூரிலும் ZAAROZ என்ற புதிய உணவு டெலிவரி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் சொமேட்டோ, ஸ்விக்கி-க்கு மாற்றாக புதிய உணவு டெலிவரி செய்யும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹோட்டல் உரிமையாளர்கள் இணைந்து இதனை செயல்படுத்தியுள்ளனர்.பிரபல உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, சொமேட்டோ ஆகியவை வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு சலுகைகளை வழங்கி வந்தன. தற்போது உணவு டெலிவரிக்கான இந்த சலுகைகளை நிறுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, உணவு ஆர்டர் செய்யும்போது, பிளாட்பார்ம் கட்டணம், டெலிவரி கட்டணம் என தனியாக செலுத்த வேண்டியிருப்பதாகவும், 80 ரூபாய் மதிப்புள்ள ஒரு உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிட்டால் 150 ரூபாய் வரை செலவு ஆவதாகவும் குற்றஞ்சாட்டிய நாமக்கல் நகர ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், ஸ்விக்கி மற்றும் சொமேட்டோவிடம் இருந்து உணவு ஆர்டர்கள் எடுப்பது இல்லை என்றும் அறிவித்திருந்தனர். உணவு டெலிவரி நிறுவனங்கள் 35% வரை கமிஷன் எடுத்துக் கொள்வதாக உணவாக உரிமையாளர்கள் குற்றச்சாட்டு வைத்தனர்.
இந்த நிலையில், ZAAROZ என்ற புதிய உணவு டெலிவரி செயலி அறிமுகமாகி நாமக்கல் மற்றும் கரூரில் வரவேற்பை பெற்ற நிலையில், கடலூர் மாவட்ட ஹோட்டல் சங்கத் தலைவர் ராம்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மருந்தகம், காய்கறி, மளிகை , பேக்கரி உள்ளிட்ட 9 சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆர்டர் செய்யப்படும் உணவுகள், ஹோட்டலில் என்ன விலைக்கு வழங்கப்படுகிறதோ அதே விலைக்கு டெலிவரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.