*ரூ.66 லட்சத்தில் நல உதவிகள் வழங்கினார்
நாமக்கல் : நாமக்கல் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், அரசு முதன்மை செயலாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து மத்திய கூட்டுறவு வங்கியில், ரூ.66 லட்சத்தில பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், வாடிக்கையாளர்களின் வசதிக்காக கோர் பேங்கிங் சொலுவிசன், செக் டிரான்ஸ்சாக்ஸசன் சிஸ்டம் ஆகிய பிரிவுகள் புதியதாக தொடங்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்பி தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில், தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, அரசு முதன்மை செயலாளர் சத்யபிரதா சாகு, கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அப்போது, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின், தலைமை அலுவலக செயல்பாடுகள், வாடிக்கையாளர்கள் வழங்கப்படும் சேவைகள் குறித்து கூட்டுவு வங்கி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து வங்கி வளாகத்தில், அரசு முதன்மை செயலாளர் சத்யபிரதா சாகு, தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமான மகளிருக்கான மின் - ஆட்டோ வாகனம் தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ. 6 லட்சம் மதிப்பில், 2 பெண்களுக்கு மின்-ஆட்டோ வாகனங்கள், மற்றும் 4 பேருக்கு வீட்டு அடமான கடன் உதவிகள் என மொத்தம் ரூ. 66 லட்சம் மதிப்பீட்டில் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மாநகர மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, கூட்டுறவாளர் ராணாஆனந்த், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் அருளரசு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் சந்தானம், பொது மேலாளர் தீனதயாளன், முதன்மை வருவாய் அலுவலர் பால் ஜோசப், தலைமை அலுவலக அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு, தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, அரசு முதன்மைச் செயலர் சத்ய பிரதா சாகு நேரில் சென்று, சங்கத்தின் செயல்பாடுகள், முதல்வர் மருந்தக சேமிப்புக் கிடங்கு, கூட்டுறவு பல்பொருள் அங்காடி, கூட்டுறவு மருந்தகம், நகைக் கடன் சேவை மையம் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விற்பனை நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சங்கத்தில் நடைபெற்று வரும் பணிகள், சேவைகள் குறித்து, சரக துணைப் பதிவாளர் ஜேசுதாஸ், சங்கப் பொது மேலாளர் மோகன்வேல் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.

