மீரட்: உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து கடத்தும் வேலையை நிர்வாண கும்பல் ஒன்று செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுவரை நான்கு சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் மீரட் அருகே உள்ள பராலா கிராமத்தில் வேலைக்கு தனியாகச் சென்ற ஒரு பெண்ணை இரண்டு ஆண்கள் வயலுக்கு இழுத்துச் செல்ல முயன்றனர். அந்தப் பெண் அலறி அடித்து அவர்களின் பிடியிலிருந்து தப்பி ஓடினார். கிராம மக்கள் அனைத்து பக்கங்களிலிருந்தும் வயல்களைச் சுற்றி வளைத்தனர். ஆனால் யாரும் கிடைக்கவில்லை.
அவர்கள் எப்படி இருந்தார்கள் என்று அந்த பெண்ணிடம் கேட்டபோது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் எந்த ஆடையும் அணியவில்லை என்று அந்தப் பெண் கூறினார். இந்த சம்பவத்தால் பயந்து போன அந்த பெண் தற்போது வேறு பாதை வழியாக சென்று வருவதாக கூறினர். இது நான்காவது சம்பவம் என்றும், முந்தைய சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் அவமானம் குறித்த பயம் காரணமாக தெரிவிக்கப்படவில்லை என்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் பெண்கள் வீடுகளை விட்டு வெளியே வர மறுத்து விட்டார்கள். இதையடுத்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதுவரை எந்த சந்தேக நபரும் பிடிபடவில்லை. எனவே டிரோன்களைப் பயன்படுத்தி அந்தப் பகுதியை கண்காணித்து வருகின்றனர்.