சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வரும் 1ம் தேதி முதல் மக்கள் சந்திப்பு யாத்திரையை தொடங்க உள்ளார். அக்டோபர் 1ம் தேதி முதல் பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பை நடத்த இருக்கிறார். இதற்காக, மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் பிரசார இடங்களை தேர்வு செய்ய உள்ளனர்.
சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையிலும், கட்சியை மாவட்ட அளவில் பலப்படுத்தும் வகையிலும் இந்த மக்கள் சந்திப்பு பிரசாரம் அமைய இருப்பதாக பாஜ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலின்போது, மாநில தலைவராக இருந்த எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடந்தது.
அதனை தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தலின்போது மாநில தலைவராக இருந்த அண்ணாமலை, ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நடத்தினார். அந்த வகையில் தற்போது மாநில தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரனும் மக்கள் சந்திப்பு யாத்திரையை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த யாத்திரை திருநெல்வேலி அல்லது கோவையில் இருந்து தொடங்கும் என்று கூறப்படுகிறது.