நயினார் நாகேந்திரன் இன்று முதல் தேர்தல் சுற்றுப்பயணம்: அதிமுகவினரும் பங்கேற்க எடப்பாடி அதிரடி உத்தரவு
சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று முதல் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். பிரசார தொடக்க விழாவில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சியினரும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர். அந்த வகையில், ஆளுங்கட்சியான திமுகவும் தேர்தலை சந்திப்பதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
இதேபோல, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என்கிற பிரசார பயணத்தை நடத்தி வருகிறார். தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை ேதாறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி வந்த நிலையில் கரூர் சம்பவத்தை அடுத்து அவரது சுற்றுப்பயணம் சில வாரங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜவும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளது. பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று முதல் “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்” என்ற பெயரில் மக்களை சந்திக்க உள்ளார்.
இந்த பிரசார சுற்றுப்பயணம் இன்று மாலை 6.05 மணியளவில் மதுரையில் இருந்து தொடங்க உள்ளது. இந்த முதல்கட்ட பிரசார சுற்றுப்பயண தொடக்க விழா நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா பங்கேற்பதாக இருந்தது.
இந்நிலையில் அவரது வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொடக்க விழா நிகழ்ச்சியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்க உள்ளார். பாஜவின் கூட்டணி கட்சியான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பிரசார சுற்றுப்பயணத்தின் தொடக்க விழாவில் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜ நிர்வாகிகள் கலந்துகொண்டு, ஆதரவு தெரிவித்ததுடன் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
அந்த வகையில், பாஜ பிரசார பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியில் அதிமுகவினரும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக எடப்பாடி மதுரை மாநகர், மதுரை புறநகர், மதுரை புறநகர் மேற்கு, மதுரை புறநகர் மேற்கு மற்றும் அருகில் உள்ள மாவட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இன்றைய பாஜ பிரசார பயண தொடக்க விழாவில் அதிமுக நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர். எடப்பாடி பழனிசாமி, ஏ.சி.சண்முகம், ஜான்பாண்டியன், பாரிவேந்தர் ஆகியோர் பங்கேற்கின்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஆகியோர் கூட்டணியில் இல்லாததால் அவர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.
அதேநேரத்தில், நயினார் நாகேந்திரன் நாளை மாலை சிவகங்கையிலும், 14ம் தேதி செங்கல்பட்டு, 15, 16ம் தேதி சென்னை என ஒவ்வொரு நாளும் ஒரு மாவட்டத்தில், கட்சி நிர்வாகிகளையும், மக்களையும் சந்திக்க உள்ளார். தொடர்ந்து அவர் முதல் கட்ட பிரசாரத்தை நவம்பர் 22ம் தேதி தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் பிரசாரத்தை முடிக்கிறார். ரோடு ஷோவுக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் நாகேந்திரனின் சுற்றுப்பயணத்தில் பொதுக் கூட்டங்கள் நடத்தி, அதன் வாயிலாக கட்சி நிர்வாகிகளையும், மக்களையும் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பாஜ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.