சென்னை: பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக , விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன. சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக இடையே கூட்டணி அமைந்துள்ளது.
அதேவேளை, தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரனும் அக்கூட்டணியிலிருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்தனர். இதனிடையே சேலத்தில் நேற்று அ.தி.மு.க . பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து நயினார் நாகேந்திரன் டெல்லி புறப்பட்டார். பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவை சந்திப்பதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
அக்டோபரில் தொடங்கவுள்ள தனது சுற்றுப் பயணம் குறித்து பா.ஜ.க.வின் தேசியத் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் தே.ஜ. கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது குறித்தும் கட்சியின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.