Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நயினார் நாகேந்திரனை நேரில் சந்தித்து நடிகை கஸ்தூரி பாஜவில் இணைந்தார்

சென்னை: நயினார் நாகேந்திரனை நேரில் சந்தித்து நடிகை கஸ்தூரி நேற்று பாஜவில் இணைந்தார். தமிழ் சினிமாவில் 1990ம் ஆண்டு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. . கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி பிரசாரம் செய்தார். ஆனால், நான் பாஜவில் இணையவில்லை என்று கூறி வந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை எழும்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய நடிகை கஸ்தூரி, \\”தெலுங்கு பேசுபவர்களை பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.

இந்த விவகாரம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தெலுங்கு மொழி பேசுபவர்கள் குறித்து நடிகை கஸ்தூரி கூறிய சர்ச்சை கருத்துக்கு தமிழக பாஜ மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியே கடும் கண்டனம் தெரிவித்தார். தனது கருத்தை கஸ்தூரி உடனடியாக திரும்பப் பெற வேண்டும்\\” என்று வலியுறுத்தினார். இந்த விவகாரம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது நடிகை கஸ்தூரி பாஜவில் இணைந்துள்ளார்.

தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனை சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று சந்தித்த அவர் பாஜவில் இணைந்தார். அவருக்கு சால்வை அணிவித்து நயினார் நாகேந்திரன் வரவேற்றார். இது தொடர்பாக தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது:

நடிகை கஸ்தூரியும், நடிகையும், சமூக செயற்பாட்டாளரும் Namis South Queen India நிறுவனத்தின் தலைவருமான திருநங்கை நமிதா மாரிமுத்துவும் சென்னை பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜ கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் பெப்சி சிவா முன்னிலையில் பாஜவில் இணைந்தனர். சமூக செயற்பாட்டாளரான கஸ்தூரியும், நமீதா மாரிமுத்துவும் அதிகாரப்பூர்வமாக அரசியல் பயணத்தில் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது. அவர்களுடைய அரசியல் பயணம் தமிழ்நாடு பாஜவில் தொடங்கி இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.