Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாகர்கோவில் மாநகராட்சியில் முடிவை எட்டாத பாதாள சாக்கடை திட்டம்: சுத்திகரிப்பு நிலையத்தில் மின் இணைப்பில் இழுபறி

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் எப்போது நிறைவு பெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது. நாகர்கோவில் மாநகரில் கடந்த மார்ச் 2013ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது. மொத்தம் 52 வார்டுகளில் 18 வார்டுகள் முழுவதும், 17 வார்டுகளில் பகுதியாகவும் திட்ட பணிகள் தொடங்கின. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வடிகால் வாரியம் திட்டத்தை செயல்படுத்தியது. மொத்தம் 118.86 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய் பதிக்க திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கின.

10 ஆண்டுகளுக்கு மேல் மந்த கதியில் பணிகள் நடந்தன. பின்னர் 2021 ல் திமுக ஆட்சி வந்ததும், பணிகளை முடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மாநகராட்சி மேயர் மகேஷ், பணிகளை வேகமாக முடிக்கும் வகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, பணிகளை வேகப்படுத்தினார். பாதாளசாக்கடை பணி தொடங்கிய 2 ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட்டிருந்தால் ரூ.52 கோடியை ஒன்றிய அரசு வழங்கி இருக்கும்.

ஆனால் காலம் கடந்ததால் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.52 கோடியை மாநில அரசு வழங்கி இருக்கிறது. அதைத் தொடர்ந்து வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் இருந்து பிரதான குழாய்களுக்கு இணைப்பு கொடுக்கும் பணிகள் நடந்தன. மேன்ஹோலில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் 6 மீட்டருக்கு குழாய்கள், இலவசமாக பதித்து கொடுக்கப்பட்டுள்ளன.

அதுபோல் மேன்ஹோலில் இருந்து வீடு 2 மீட்டருக்குள் இருந்தால், 2 மீட்டர் அளவிற்கு குழாய் பதிக்கப்பட்டு மீதமுள்ள 4 மீட்டர் அளவிலான குழாய்கள் வீட்டிற்குள் பதித்து கொடுக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 15,575 வீடுகளில் முதல் கட்டமாக 8,440 வீடுகளுக்கு ஏற்கனவே இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7135 வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பணியும் இறுதி கட்டத்தில் உள்ளன.பாதாள சாக்கடைக்காக வடிவீஸ்வரம் பறக்கிங்கால் பகுதியில் கழிவுநீர் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவு நீரேற்று நிலையத்துக்கு, கழிவு நீர் கொண்டு செல்லப்பட்டு, பின்பு அங்கிருந்து வலம்புரிவிளை உரக்கிடங்கு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும். அங்கு சுத்திகரிப்பு செய்யப்பட்டு சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள தெங்கம்புதூர் கால்வாயில் சாகுபடி பணிக்காக தண்ணீர் பயன்படுத்தப்படும்.

கழிவு நீரேற்று நிலையத்தில் இருந்து, சுத்திகரிப்பு நிலையம் வரை தண்ணீர் கொண்டு வரும் பணிகள் முடிவடைந்து சோதனையும் நடைபெற்று உள்ளது. தினமும் 175 லட்சம் லிட்டர் தண்ணீர் இந்த சுத்திகரிப்பு நிலையம் மூலம் பிரிக்கும் வகையில் 2 பிரமாண்டமான பிளாண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சுத்திகரிப்பு நிலையம் ரூ.17 கோடியிலும், பறக்கின்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீரேற்று நிலையம் ரூ.6 கோடியிலும் அமைக்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு தண்ணீர் தெங்கம்புதூர் கால்வாயில் விடும் வகையில் தனியாக குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இணைப்பு கொடுக்கப்பட்ட பகுதியில் இருந்து பறக்கிங்காலில் உள்ள கழிவு நீரேற்று நிலையத்துக்கு கழிவுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. அந்த கழிவுகள் மோட்டார் மூலம், வலம்புரிவிளையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்பட்டு சோதனை நடந்து வருகிறது.

ஆனால் இன்னும் சுத்திகரிப்பு நீர் வெளியேற்றப்பட வில்லை. வலம்புரிவிளையில் உள்ள சுத்திகரிப்பு தொட்டியில் தான் உள்ளன. சுத்திகரிப்பு தொட்டியில் அசுத்தங்களை அழிக்கும் நுண்ணுயிரியல் பெருக்கம் (மைக்ரோ ஆர்கானிசம்) வளர்க்கப்பட வேண்டும். அவை வளர்க்கப்பட்டு, சுத்திகரிப்பு தண்ணீர் எந்த வித நுண்கிருமிகளும் இல்லாத நிலையில் தான் வெளியேற்றம் செய்யப்படும் என அதிகாரிகள் கூறினர். ஆனால் இன்னும் சுத்திகரிப்பு நிலையம் முழுமையாக இயங்காத நிலையில் உள்ளது. மின் இணைப்புகள் கொடுப்பதில் பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முழுமையாக செயல்பாட்டுக்கு வராத நிலை இருப்பதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். மின் வாரியமும், குடிநீர் வடிகால் வாரியமும் இணைந்து பேசி இந்தபிரச்சினைக்கு முழுமையாக தீர்வு காணப்பட வேண்டும் என கோரிக்ைக எழுந்துள்ளது.