Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நாகர்கோவில் ஒழுகினசேரி, புத்தேரி பஸ்நிறுத்தங்களில் இடிந்து விழும் நிலையில் நிழற்குடைகள்

*உடனடியாக மாற்றி தர கோரிக்கை

நாகர்கோவில் : நாகர்கோவிலில் ஒழுகினசேரி மற்றும் புத்தேரியில் ஆபத்தான நிலையில் உள்ள பஸ் நிறுத்த நிழற்குடைகளை உடனடியாக மாற்றி தர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாகர்கோவில் மாநகரில் முக்கிய சந்திப்புகளில் பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இவற்றில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு சில நிழற்குடைகள் மட்டுமே புதுப்பிக்கப்பட்டு உள்ளன. ஏனைய நிழற்குடைகள், மோசமான நிலையில் இருக்கின்றன.

அந்த வகையில் நாகர்கோவில் ஒழுகினசேரி சந்திப்பு, பஸ் நிறுத்த நிழற்குடையும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அண்ணா பஸ் நிலையத்தில் வடசேரி பஸ் நிலையம் மற்றும் ஆரல்வாய்மொழி, குமாரபுரம், தோவாளை, செண்பகராமன்புதூர், வடக்கன்குளம், ஆவரைகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்பவர்கள் இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து தான் பயணிக்கிறார்கள்.

இந்த நிழற்குடையில் ஆங்காங்கே விரிசல் விழுந்துள்ளது. அது மட்டுமின்றி மழை காரணமாக, நிழற்குடை கட்டிடங்கள் பெயர்ந்து விழுந்து வருகின்றன. இதனால் பயணிகள் மிகவும் அச்சத்துடன் நிற்க வேண்டிய நிலை உள்ளது. பகல் வேளைகளில் மட்டுமில்லாமல், இரவு வேளைகளிலும் இந்த நிழற்குடையில் ஆதரவற்றவர்கள் சிலர் படுத்து உறங்குகிறார்கள். எனவே எந்த நேரமும் ஆட்கள் இருக்கும், நிழற்குடை ஆகும்.

மாநகரின் முக்கிய சந்திப்பில் உள்ள இந்த நிழற்குடை, ஆபத்தான நிலையில் இருப்பது பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக இந்த நிழற்குடையை அகற்றி விட்டு, புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதே போல் நாகர்கோவில் அருகே உள்ள புத்தேரியில் உள்ள நிழற்குடையும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த நிழற்குடையையும் அகற்றி விட்டு, புதிதாக கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்ைக வைத்தனர்.

இதன் அடிப்படையில் புத்தேரி ஊராட்சி நிர்வாகம் சார்பில், பஸ் நிறுத்த நிழற்குடையை மாற்றி தர வேண்டும் என கோரி கடிதமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை நிழற்குடை இடிக்கப்பட வில்லை. இந்த நிழற்குடையை இடித்து விட்டு புதிதாக கட்ட அனுமதி கிடைத்துள்ளது. ஜூன் 4ம் தேதிக்கு பின், பணிகள் தொடங்க வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் கூறினர்.

விபரீதங்கள் நிகழும் முன் நடவடிக்கை தேவை

வருகிற 6ம் தேதி, பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அப்போது பஸ் நிறுத்தங்களில் உள்ள நிழற்குடைகளில் அதிகளவில் பள்ளி மாணவ, மாணவிகளும் இருப்பார்கள். மழையும் தொடர்ந்து பெய்யும் நிலை உள்ளது. எனவே விபரீதங்கள் நிகழும் முன் ஆபத்தான நிழற்குடைகளை மாற்றி அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.