Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாகப்பட்டினம் மாவட்டத்தில் விளையும் புடலங்காய் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி

*மதிப்பு கூட்டி விற்பனை செய்ய பயிற்சி அளிக்க வேண்டும்

*குறைதீர் கூட்டத்தில் விவசாயி வேண்டுகோள்

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் விளையும் புடலங்காய் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே மதிப்பு கூட்டி விற்பனை ெசய்ய பயிற்சி அளிக்க வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயி வேண்டுகோள் விடுத்துள்ளார்.விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்க கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை வகித்தார்.கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

சித்தார்த்தன்: தமிழ்நாட்டில் மழை இல்லை. மேட்டூர் அணையில் இருந்து கர்நாடக அரசு டெல்டா மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடவில்லை. நடப்பு ஆண்டில் குறுவை சாகுபடி பொய்த்து போய் விட்டது. இந்நிலையில் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடனை எப்படி திரும்ப செலுத்த முடியும். எனவே விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகள் வாங்கிய கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய பரிந்துரை செய்ய வேண்டும்.

தமிழ்செல்வன்: பொறியியல் துறை மூலமாக மானியத்தில் வழங்கப்படும் இயந்திரங்களை மானியத்தில் பெற்ற விவசாயிகள் தான் பயன்படுத்துகிறார்களா என்பதை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். தமிழக முதல்வர் விவசாயிகளின் நலன் கருதி ஊக்கத்தொகை அறிவித்துள்ளார். இதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். சன்னரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130 உயர்தியும், மோட்டா ரகத்திற்கு ரூ. 105 உயர்த்தியும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் சன்னரகம் ரூ. 2 ஆயிரத்து 450க்கும், மோட்டா ரகம் ரூ. 2 ஆயிரத்து 405க்கும் விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படும். இந்த நடைமுறையை செப்டம்பர் மாதம் முதல் அமல்படுத்தாமல் நடப்பு மாதத்தில் இருந்தே அமல்படுத்த வேண்டும்.

மணியன்: வேதாரண்யம் பகுதியில் 18 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கோயிலுக்கு சொந்தமானது. முன்பு விஏஓ மூலம் சான்றுகள் பெற்று விவசாயிகள் கடன் வாங்கி வந்தோம். ஆனால் அறநிலையத்துறையில் சான்று பெற வேண்டும் என புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதால் விவசாயிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். இதை போக்க மீண்டும் பழைய நடைமுறையை கொண்டு வரவேண்டும்.

பாஸ்கரன்: கடந்த 5 ஆண்டு காலத்திற்கு பின்னர் வடுகூர் சுடுகாடு பாதையில் சேதமடைந்து கிடந்த மின்கம்பங்களை சீர் செய்து கொடுத்த ஆட்சியருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். வேளாண்மை பொறியியல் துறை டிராக்டர் மூலம் உழவு செய்யும் விவசாயிகளக்கு மட்டும் உழவு மானியம் வழங்கப்படுகிறது. அனைத்து விவசாயிகளுக்கும் உழவு மானியம் வழங்க வேண்டும். ஆயில் இன்ஞ்சின் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் வழங்க வேண்டும்.

கமல்ராம்: தலைஞாயிறு பகுதி மக்களின் குடிநீர் ஆதாரத்தை பறிபோக செய்யும் அம்ரூத் குடிநீர் திட்டத்தின் முரண்பாடுகள் சரி செய்யப்படும் வரை பணிகள் நிறுத்த வேண்டும். குடிநீர் கேட்டு போராடிய அப்பாவி பெண்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை போலீசார் திரும்ப பெற வேண்டும். தலைஞாயிறு வேளாண்மை துறை ஆத்மா ஆலோசனை குழுவில் தகுதியான விவசாயிகள் இடம் பெற செய்ய வேண்டும்.

பிரபாகரன்: கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்கப்படும் விவசாய நகைக்கடன்கள் வட்டியில்லாமல் 8 மாதங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இதை ஒரு ஆண்டு காலமாக மாற்றம் செய்ய வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ஊக்கத்தொகை வழங்கிய தமிழக அரசுக்கு கடைமடை விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

ராம்தாஸ்: தமிழகத்தில் 10 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் குறைந்துள்ளதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மகசூல் இழப்பிற்கு எற்ப விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

முத்துக்குமார்: சிக்கல் அருகே வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலையம்(கேவிகே) அமைந்துள்ளது. இந்த மையத்தால் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளை தொழில் முனைவோராக்கும் எந்த பயிற்சியும் அளிக்கவில்லை. நாகப்பட்டினம் மாவட்டத்தில் விளையும் மாங்காய், நிலக்கடலை, கத்தரிக்காய், புடலங்காய் ஆகியவற்றிற்கு என தனித்தன்மை உள்ளது.

வெளி மாநிலங்களில் இருந்து நாகப்பட்டினம் வந்து இவை எல்லாவற்றையும் குறைந்த விலைக்கு வாங்கி சென்று இடைத்தரகர்கள் மூலமாக அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். அதே போல் நாகப்பட்டினத்தில் இருந்து மத்தி மீன்கள் அதிக அளவில் கேரளா மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதை எல்லாம் வைத்து மதிப்பு கூட்டி எப்படி விற்பனை செய்வது என பயிற்சி அளிக்க வேண்டும் என கூறி பொய்கைநல்லூரில் விளைந்த புடலங்காய் கலெக்டரிடம் கொடுத்தார்.

வேளாண் இணை இயக்குநர் தனுஷ்கோடி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் சிவப்பிரியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள்(பொது) ராமன், (கூடுதல்) யாஸ்மின்சகர்பால், (வேளாண்மை) தேவேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.