Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாகாலாந்து ஆளுநரும், பாஜ மூத்த தலைவருமான இல.கணேசனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் இறுதி அஞ்சலி; ஒன்றிய, மாநில அமைச்சர்கள், கவர்னர்கள் பங்கேற்பு

சென்னை: நாகாலாந்து ஆளுநரும், பாஜ மூத்த தலைவருமான இல.கணேசனின் உடல் நேற்று அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். பாஜ மூத்த தலைவர்களில் ஒருவராகவும், நாகாலாந்து ஆளுநராகவும் இருந்து வந்தவர் இல.கணேசன் (80). இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை காலமானார்.

இதையடுத்து, அவரது உடல், சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக தியாகராய நகர் வெங்கட்நாராயண ரோட்டில் உள்ள கண்ணதாசன் மைதானத்தில் இல.கணேசன் உடல் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு, ஜெ.கருணாநிதி எம்எல்ஏ, தலைமை செயலாளர் நா.முருகானந்தம், பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதேபோல திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நடிகர் சரத்குமார், துணை தலைவர்கள் சக்கரவர்த்தி, டால்பின் ஸ்ரீதர், பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநில செயலாளர்கள் வினோஜ் பி.செல்வம், கராத்தே தியாகராஜன், எஸ்.சதீஷ்குமார் உள்ளிட்ட பாஜவினர், இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர், விஐடி நிறுவனர்-வேந்தர் கோ.விசுவநாதன், விஐடி துணை தலைவர் ஜி.வி.செல்வம், தி.க. தலைவர் கி.வீரமணி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட தலைவர்கள், பாஜ நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மாலையில் இல.கணேசன் உடல் சந்தன பேழையில் வைக்கப்பட்டு வாகனத்தில் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ரகுபதி, மா.சுப்பிரமணியன் பங்கேற்றனர். மேலும், நாகாலாந்து முதல்வர் நைபியு ரியோ சிலு, ஒன்றிய இணை அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால், எல்.முருகன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஜெகத்ரட்சகன் எம்பி, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜ பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் பாஜ தலைவர்கள் பங்கேற்றனர். புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், நாகாலாந்து மாநில அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவரது உடலை முப்படை வீரர்கள் சுமந்து வந்தனர். தொடர்ந்து 42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இல.கணேசன் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு நாகாலாந்து மாநிலத்தில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.