நாகப்பட்டினம்: நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று விஜய் பிரசாரம் செய்கிறார். நாகையில் மின்தடை செய்யக்கோரி தவெகவினர் மனு அளித்து உள்ளனர். சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் தவெக தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சனிக்கிழமை தோறும் பிரசாரத்தை கடந்த 13ம் தேதி தொடங்கினார். கடந்த சனிக்கிழமை திருச்சி, அரியலூரில் பிரசாரம் செய்தார். 2வது சனிக்கிழமையான இன்று (20ம்தேதி) நாகப்பட்டினம், திருவாரூரில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
நாகப்பட்டினம் புத்தூர் அண்ணா சிலை அருகே 20 நிபந்தனைகளுடன் காலை 12.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், திருவாரூரில் தெற்கு வீதி நகராட்சி அலுவலகம் அருகில் பிரசாரம் செய்ய 26 நிபந்தனைகளுடன் மதியம் 1 மணி முதல் 2 மணி வரையிலும் பிரசாரம் செய்ய அந்தந்த மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக இன்று (20ம்தேதி) காலை சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வரும் விஜய், காரைக்காலில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் இறங்குகிறார்.
பின்னர் அங்கிருந்து காரில் புத்தூர் அண்ணாசிலை அருகே வந்து பிற்பகல் 12.30 மணிக்கு பிரசாரம் செய்கிறார். வாஞ்சூர் ரவுண்டானாவில் இருந்து புத்தூர் அண்ணாசிலை வரை விஜய் காரில் வருகிறார். வரும் வழிகளில் எங்கும் ரோடு ஷோ நடத்த கூடாது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜய் பிரசாரம் செய்ய உள்ள அண்ணாசிலை பகுதியில் உயரழுத்த மின்கம்பங்கள் அதிகளவு உள்ளது. விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் தொண்டர்கள் மரங்கள், மின்கம்பங்கள் மீது ஏறுவதால், அப்பகுதியில் பிரசாரம் முடியும் வரை மின்சாரம் தடை செய்ய வேண்டும் என மின்சார வாரிய செயற்பொறியாளருக்கு தவெக சார்பில் மாவட்ட செயலாளர் சுகுமார், மனு கொடுத்துள்ளார்.
* பெரியார் சிலையை மறைத்து பேனர்
விஜய் பிரசாரம் செய்யவுள்ள இடத்தில் அண்ணா மற்றும் பெரியார் சிலை அருகருகே அமைந்துள்ளது. விஜயை வரவேற்று வைக்கப்பட்ட விளம்பர பதாகை பெரியார் சிலையை முழுவதுமாக மறைக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. பெரியார் கொள்கையை விஜய் பேசுகிறார்.
ஆனால் அவரது கட்சியை சேர்ந்த தொண்டர்கள் பெரியார் சிலையை மறைத்து விளம்பர பதாகை வைத்து இருப்பது ஏற்புடையது இல்லை. அந்த பதாகையை அகற்ற வேண்டும் என பெரியாரின் தொண்டர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். போலீசார் அறிவுறுத்தலின் பேரில் அந்த பதாகைகள் நேற்று மாலை அகற்றப்பட்டது.
* காவி நிறத்தில் கொடி
விஜய் வருகையை முன்னிட்டு அவரை வரவேற்க நாகப்பட்டினம் சாலைகளில் கொடிகள் நடப்பட்டது. இதில் தவெக கொடியின் நடுப்பகுதியில் மஞ்சள் நிறம் இடம் பெற வேண்டும். ஆனால் காவி நிறம் இடம் பெற்றது. இதை பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சாலைகளில் நடப்பட்ட கொடிகள் அனைத்தும் அகற்றப்பட்டது.