நாகை: வானிலை மாற்றம் காரணமாக நாகை-இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று முதல் நவம்பர் 30ம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு சுபம் கப்பல் நிறுவனம் சார்பில் “சிவகங்கை” என்ற பெயரில் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கப்பலில் நாள்தோறும் இலங்கையில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள், வெளிநாட்டினர் என ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த கப்பல் வாரத்தில் செவ்வாய்க் கிழமையைத் தவிர்த்து 6 நாட்கள் மட்டுமே சேவை நடைபெற்று வந்தது. பண்டிகை காலத்தையொட்டி இருநாட்டு பயணிகளின் அதிகரித்துள்ள தேவையை கருத்தில் கொண்டு, அக்டோபர் மாதம் முழுவதும் வாரம் முழுவதும் கப்பல் சேவை வழங்கப்பட்டு வந்தது. அதன்படி கடந்த 14, 21ம் தேதிகளில் (செவ்வாய்க்கிழமைகளில்) கூட சேவை நடைபெற்றது.
இதற்கு பயண கட்டணமாக நாகையிலிருந்து இலங்கை சென்று வர ரூ.8,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் நாகையிலிருந்து இலங்கை செல்ல ரூ.4,500, இலங்கையிலிருந்து நாகை திரும்ப ரூ.3,500 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததாலும், வானிலை மாற்றத்தின் காரணமாகவும் இன்று (26ம் தேதி) முதல் வரும் டிசம்பர் மாதம் வரை நாகை-இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று கப்பல் நிறுவனம் அறிவித்து உள்ளது.
