நடிகர் திலகமே கடைசியில் ஜெயிக்க முடியாமல் போனார் அரசியலுக்கு வந்ததுமே முதல்வர் கனவா? விஜய் மீது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அட்டாக்
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பில் அதிமுக பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டு, ‘‘இன்று அரசியலுக்கு யார் யாரோ புதிதாக வந்துள்ளனர். 10 படங்கள் ஓடினாலே முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற மாயை எண்ணத்தில் உள்ளனர். அவர்கள் அரசியலில் அனுபவம் ஏதும் இல்லாதவர்கள். ஆட்சிக்கு, பொறுப்புக்கு வர பக்குவம், பட்டறிவு, அரசியல் அறிவு, அனுபவம் தேவை. இன்னும் அவர்கள் பயிற்சி பெற வேண்டும். அரசியலுக்கு வந்தவுடன் நான் தான் முதலமைச்சர் என்று கூறுகின்றனர்.
இதை மக்கள் நன்றாக சிந்தித்து பார்க்க வேண்டும்’’ என்று பேசினார். முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேசுகையில், ‘‘நத்தம் விஸ்வநாதன் சொன்னார் 8 மணிக்கு கட்சி ஆரம்பிச்சுட்டு 8.45 மணிக்கு முதலமைச்சர் ஆகணும்னு நினைக்கிறார் என்று. நேராக கோட்டைக்கு சென்று முதலமைச்சர் சீட்டில் உட்கார்ந்து கையெழுத்து போடுவேன் என்கிறார். நடிகராக இருந்த எம்ஜிஆர் முதலமைச்சராக பேரறிஞர் அண்ணாவை ஆக்கினார். எம்ஜிஆரை பத்திரிகையாளர்கள், ‘நீங்கள் நடிகர் என்ற காரணத்தினால் தான் முதலமைச்சரானீர்களா’ என்று கேட்டனர்.
அதற்கு எம்ஜிஆர் என்ன சொன்னார் தெரியுமா, ‘‘நடிகர் என்பதால் மக்களிடத்தில் எளிதில் அறிமுகமானேன். நல்லவன் என்கின்ற காரணத்தினால் என்னை முதலமைச்சர் ஆக்கினார்கள்’’ என்றார். இரண்டு தையல் மிஷின்கள் வாங்கி கொடுத்து விட்டு நான்தான் முதலமைச்சர் என்கிறார். தமிழ்நாட்டில் கட்சி துவங்கி எவ்வளவு பேர் காணாமல் போயிருக்கிறார்கள் என்று தெரியுமா? நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எவ்வளவு பெரிய நடிகர்? அவர் மாதிரி நடிக்க முடியுமா? அவரும் கட்சி துவங்கி கடைசியில் ஜெயிக்க முடியாமல் போனார்’’ என்றார்.

