வில்னியஸ்: லிதுவேனியாவின் வான்பரப்பில் மர்மமான வெப்பக் காற்று பலூன்கள் பறந்ததைத் தொடர்ந்து, வில்னியஸ் விமான நிலையத்தின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சமீப வாரங்களாக கோபன்ஹேகன், முனிச் போன்ற ஐரோப்பிய நகரங்களில் மர்ம ட்ரோன்கள் பறந்ததால் விமானப் போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு கூட, வில்னியஸ் விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான ட்ரோன் செயல்பாட்டால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், லிதுவேனியா மற்றும் அதன் அண்டை நாடான பெலாரஸ் இடையே எல்லைப் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், மீண்டும் வான்வெளி விதிமீறல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகரெட்டுகளைக் கடத்துவதற்காக கடத்தல்காரர்கள் பலூன்களைப் பயன்படுத்துவதாக வெளியாகும் செய்திகளுக்கு மத்தியில், இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வில்னியஸ் விமான நிலையத்தின் வான்பரப்பில் நேற்று இரவு வெப்பக் காற்று பலூன்கள் பறப்பதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, விமானப் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது.
‘விமான நிலையத்தை நோக்கி பலூன்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால்’ இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், ‘விமான நிலையத்தின் வடக்குப் பகுதியில் வானிலை ஆய்வு பலூன்கள்’ இருப்பதாக வான்படை வீரர்களுக்கான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டதாக ஃபிளைட் ராடார்24 சேவை தெரிவித்துள்ளது. இந்த திடீர் தடையால், வில்னியஸ் விமான நிலையத்திற்கு வந்த விமானங்கள் லாட்வியா, போலந்து போன்ற அண்டை நாடுகளுக்குத் திருப்பி விடப்பட்டன.