மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, பன்னிமண்டபத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற டிரோன் கண்காட்சி ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை மகிழ்வித்தது. மைசூரு தசரா மஹோத்சவத்தை முன்னிட்டு சாமுண்டீஸ்வரி மின்சார விநியோகக் கழகம் ஏற்பாடு செய்த டிரோன் கண்காட்சியின் இரண்டாம் நாள் பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஆயிரக்கணக்கான பார்வையாளர்களால் நிரம்பியிருந்த அணிவகுப்பு மைதானத்தில், 3,000 டிரோன்கள் வரை வானத்தில் பல்வேறு கலைப் படைப்புகளின் வண்ணமயமான படங்களை வரைந்து அனைவரையும் பரவசப்படுத்தின. ஒரே நேரத்தில் வானில் பறந்த ட்ரோன்கள் வண்ணமயமான விளக்குகளுடன் மின்னும் கவர்ச்சிகரமான கலைப்படைப்புகளை உருவாக்கியது.
சூரிய குடும்பம், உலக வரைபடம், நாட்டின் பெருமைமிகு ராணுவம், மயில், தேசிய விலங்கு புலி, டால்பின், கழுகு, பாம்பின் மீது நடனமாடும் கிருஷ்ணர், அன்னை காவிரி, சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமாரின் உருவப்படத்துடன் கூடிய கர்நாடக வரைபடம் மற்றும் ஐந்து உத்தரவாதத் திட்டங்களுடன் கூடிய கர்நாடக வரைபடம், அம்பரி யானை மற்றும் சாமுண்டீஸ்வரி அம்மனின் கலைப்படைப்புகள் நீல வானத்தில் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பார்வையாளர்களுக்கு அற்புதமான பொழுதுபோக்கை வழங்கின.