மயிலாப்பூர் தொழிலதிபரிடம் டிஜிட்டல் கைது மூலம் ரூ.4.15 கோடி பறித்த வழக்கில் தூத்துக்குடி வாலிபர் கைது: சென்னை சைபர் க்ரைம் நடவடிக்கை
சென்னை: டிஜிட்டல் கைது மூலம் மயிலாப்பூர் தொழிலதிபரை மிரட்டி ரூ.4.15 கோடி பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை சென்னை சைபர் க்ரைம் போலீசார் தூத்துக்குடியில் கைது செய்தனர். சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் ஸ்ரீவத்ஸன்(73). தொழிலதிபரான இவர், கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தான் மும்பை குற்றவியல் துறையின் அதிகாரி பேசுவதாகவும், உங்கள் பெயரில் வாங்கப்பட்ட சிம்கார்டு சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தியதாக கூறி, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை, இன்டர்போல், உச்ச நீதிமன்றம் வெளியிட்டது போன்ற ஆவணங்களை அனுப்பி மிரட்டியுள்ளார்.
பிறகு ரிசர்வ் வங்கி ஆய்வு என்று கூறி அவரது வங்கி கணக்கு விபரங்களை கேட்டுள்ளார். பின்னர் இந்த வழக்கில் இருந்து உங்களை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.5 கோடி வரை பணம் கேட்டுள்ளார். பணம் கொடுக்கவில்லை என்றால் உங்களை கைது செய்துவிடுவேன் என்று ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்து அவரிடம் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 25ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 5ம் தேதி வரை மொத்தம் ரூ.4.15 கோடி பணம் மோசடி நபர் தனது வங்கி கணக்கிற்கு பணத்தை பெற்று கொண்டார்.
இதுகுறித்து வெளியில் சொல்ல முடியாமல் தொழிலதிபர் வழக்கில் இருந்து விடுபட்டால் போதும் என்று நினைத்து கொண்டிருந்தார். அதேநேரம் சில நாட்கள் கழித்து இது மோசடியாக இருக்குமோ என்று கடந்த அக்டோபர் மாதம் 13ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தொழிலதிபர் வத்ஸன் புகார் அளித்தார்.
அந்த புகாரின் படி கமிஷனர் அருண் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவு விசாரணை நடத்தினர். அதில், உத்தரப்பிரதேசம் ஜான்சி மாவட்டம் மவுரானிப்பூர் குரேச்சா பகுதியை சேர்ந்த மணீஷ்குமார்(23) என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே சைபர் க்ரைம் தனிப்படையினர் உத்தரப்பிரதேசம் சென்று உள்ளூர் காவல்துறை உதவியுடன் கடந்த 28ம் தேதி மணீஷ்குமாரை கைது ெசன்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர் அளித்த தகவலின்படி இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்ைத சேர்ந்த செல்வக்குமார்(35) என்பவரை சைபர் க்ரைம் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு செல்போன், 2 காசோலை புத்தகங்கள், மோசடி பரிவர்த்தனைக்கு பயன்படுத்திய வங்கி கணக்கு புத்தகம் பறிமுதுல் செய்யப்பட்டது.


