புதுடெல்லி: மியான்மர் மோசடி மையங்களில் இருந்து தப்பி தாய்லாந்து சென்ற 500 இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மியான்மர் நாட்டில் செயல்படும் சைபர் மோசடி மையங்களில் இருந்து கடந்த மார்ச் மாதம் இந்தியா 549 இந்தியர்களை மீட்டது. அதே போல் அங்குள்ள மோசடி மையங்களில் இருந்து சமீபத்தில் 1500 பேர் தப்பி தாய்லாந்து சென்றனர். அதில் 500 பேர் இந்தியர்கள் என்பது தெரிய வந்தது.
மியான்மர் கே.கே.பார்க் வளாகத்தில் அவர்கள் பணி புரிந்து வந்தனர். தற்போது அங்கிருந்து தப்பி தாய்லாந்தின் மேற்குபகுதியில் உள்ள மே சோட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதை தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் தெரிவித்தார். இதையடுத்து அவர்களை மீட்க இந்தியா தனி விமானம் அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்தார். இதை வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் உறுதிப்படுத்தினார்.
