புதுடெல்லி: மியான்மர்-தாய்லாந்து எல்லையில் உள்ள சைபர் குற்ற மையங்களில் இருந்து தப்பி ஓடி தாய்லாந்துக்குள் நுழைந்த 270 இந்தியர்கள் விமான படை விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். தாய்லாந்து, மியான்மரில் ஐடி துறையில் வேலைகள் வாங்கி தருவதாக ஏஜெண்டுகள் அளித்த பொய் வாக்குறுதிகளை நம்பி ஆந்திரா,தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் பலர் அந்த நாடுகளுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் மியான்மரின் எல்லை பகுதிகளில் சீன மாபியா கும்பல்களால் நடத்தப்படும் சைபர் குற்ற மையங்களுக்கு கடத்தப்பட்டுள்ளனர். அங்கு கிரிப்டோ மோசடி, பணமோசடி மற்றும் சட்டவிரோத சூதாட்டம் வரை ஆன்லைன் குற்றச் செயல்களை நடத்த அவர்கள் அழுத்தம் கொடுக்கப்படுகிறார்கள். மோசடி கும்பலிடம் சிக்கி தவித்த பலர் மீட்கப்பட்டுள்ளனர்.
ஏராளமானோர் இன்னும் மோசடி கும்பலின் பிடியில் உள்ளனர். கடந்த மாதம் மியான்மர் நாட்டின் மையவாடி என்ற இடத்தில் செயல்பட்டு வந்த சைபர் மோசடி மையத்தில் மியான்மர் ராணுவம் சோதனை நடத்தியது. இதையடுத்து இந்தியாவை சேர்ந்த 500 பேர் உட்பட 1500 பேர் அங்கிருந்து தப்பி தாய்லாந்துக்குள் நுழைந்தனர். அந்த நாட்டுக்குள் சட்ட விரோதமாக நுழைந்ததாக கூறி தாய்லாந்து போலீசார் அவர்களை கைது செய்தனர். தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டு இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில்,தாய்லாந்தில் இருந்து 270 இந்தியர்கள் இந்திய விமான படை விமானம் மூலம் நேற்று டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.
