Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

என்னுடைய மகன் தோற்கப்போவது உறுதி: ஏ.கே. அந்தோணி பேட்டி

திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் ஆண்டனி கடந்த வருடம் காங்கிரசிலிருந்து விலகி பாஜவில் சேர்ந்தார். தற்போது அனில் ஆண்டனி கேரள மாநிலம் பத்தனம்திட்டா தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிடுகிறார்.மகனை எதிர்த்து ஏ.கே. அந்தோணி பத்தனம்திட்டாவில் பிரசாரம் செய்வாரா என்ற பரபரப்பு நிலவியது. இந்நிலையில் ஏ.கே. அந்தோணி நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியது: காங்கிரஸ் தலைவர்களின் வாரிசுகள் பாஜவுக்கு செல்வது தவறான செயலாகும். அதனால் அவர்களுக்கு எந்தப் பலனும் ஏற்பட போவதில்லை. காங்கிரஸ் மட்டும் தான் என்னுடைய மதமாகும். மகனுக்கு எதிராக பிரசாரம் செய்வீர்களா என்று பலரும் என்னிடம் கேட்கின்றனர். என்னுடைய உடல்நிலை ஒத்துழைக்காததால் என்னால் பத்தனம்திட்டாவுக்கு செல்ல முடியவில்லை. நான் பிரசாரத்துக்கு செல்லா விட்டால் கூட அங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆன்டோ ஆண்டனி நிச்சயம் வெற்றி பெற்று விடுவார்.

என்னுடைய மகன் அனில் ஆண்டனி தோற்கப்போவது உறுதி. பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது நாட்டுக்கு பெரும் ஆபத்தாக முடியும். அரசியலமைப்பு சட்டத்தையே அவர்கள் அழித்து விடுவார்கள். பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது ஜனநாயகத்தின் அழிவுக்கு ஆரம்பமாக அமையும். வரும் தேர்தலில் பாஜவை தோற்கடிக்க வேண்டும் என்பது தான் காங்கிரசின் முக்கிய குறிக்கோளாகும். இந்தியா கூட்டணி நிச்சயமாக அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் என்றார்.