Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி, தலைவர்கள் மரியாதை

ராமநாதபுரம்: பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் தலைவர்கள் மரியாதை செலுத்தினர. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே, பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி விழா, 63ம் ஆண்டு குருபூஜை விழாவில், மூன்றாவது நாளான நேற்று அரசு விழாவாக நடைபெற்றது. துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மதுரை விமான நிலையத்தில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன் கிராமத்துக்கு நேற்று காலை வந்தார்.

அவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எஸ்பி சந்தீஷ் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் பிரத்யேக வாகனத்தில் நினைவிடம் வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை, தேவர் நினைவாலய அறங்காவலர் காந்தி மீனாள் நடராஜன் குடும்பத்தினர் வரவேற்றனர். தொடர்ந்து நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். தேவரின் பூஜை அறைக்கு சென்று 5 நிமிடம் தியானம் செய்தார்.

அதிமுக சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, காமராஜ், மணிகண்டன் மற்றும் ராஜன்செல்லப்பா எம்எல்ஏ உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பாஜ சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக சார்பில் ஜி.கே.மணி, காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, திருநாவுக்கரசர், தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் நடிகர் கருணாஸ், மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். மேலும், பல்வேறு அமைப்பினர், பொதுமக்களும் திரளாக பங்கேற்று மரியாதை செய்தனர்.

* ‘தேசிய தலைவர்கள் விழாவை அனைத்து சமுதாயத்தினரும் கொண்டாட வேண்டும்’

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், முத்துராமலிங்கத்தேவர் தனது ஜமீன் சொத்தில் பெரும் பகுதியை மாற்று சமூகத்தினருக்கு அளித்தவர். நேதாஜி இறந்ததை அவர் நம்பவில்லை. அவர் இறக்கவில்லை என்று கடைசி காலம் வரை தேவர் கூறினார். அதனை நானும் நம்புகிறேன். கடந்த 25 ஆண்டுகளாக நான் அவரது திருக்கோயிலுக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறேன்.

இந்த ஆண்டு துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் வாய்ப்பு கிடைத்த பின்பு, தமிழ்நாட்டின் முதல் வருகையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இருக்க வேண்டும் என்ற உணர்வோடு வந்துள்ளேன். தயவு செய்து நான் அனைத்து சமூகத்தினரையும் வேண்டுவது என்னவென்றால், வரும் காலத்திலாவது அனைத்து தேசிய தலைவர்களின் விழாவையும் அனைத்து சமூகத்தினரும் கொண்டாடும் விழாவாக மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* சீமான் - வைகோ கட்டி பிடித்து நலம் விசாரிப்பு

தேவர் நினைவாலய வளாகத்தில் மரியாதை செலுத்திய பின்னர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்தார். அப்போது அங்கு வந்த வைகோவை பார்த்ததும் கட்டிப்பிடித்து வணக்கம் தெரிவித்தார். தொடர்ந்து வைகோ செய்தியாளர் சந்திப்பிலும், சந்திப்பு முடியும் வரையிலும் சீமான் அவருடனே இருந்தார்.

அப்போது செய்தியாளர்கள், ‘‘முதல்முறையாக இருவரும் ஒன்றாக சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்து இருக்கிறீர்களே’’ என்று கேட்டதற்கு, ‘‘இல்லை. இதற்கு முன்பு தாயார் இறப்பு நிகழ்ச்சிக்கு அவர் வந்திருந்த போதும், ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தோம்’’ என்று வைகோ கூறினார். இருவரும் இணைந்து சந்திப்பது தொடருமா என்று கேட்டதற்கு, வைகோ சிரித்துக் கொண்டே ‘‘தொடரும்’’ என்று கூறிக் கொண்டே சென்றார்.

* பூசாரியை தாக்கிய ஸ்ரீதர் வாண்டையார்

தேவர் நினைவாலயத்தில் நேற்று காலை மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் மரியாதை செலுத்த வந்தார். அப்போது அங்கிருந்த நினைவாலய பொறுப்பாளரின் உறவினரான பூசாரி, செங்கோட்டையன், டிடிவி.தினகரன், ஓபிஎஸ் வருவதால், சிறிது நேரம் காத்திருக்கக் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதர் வாண்டையார், ‘‘நீ எல்லாம் யாரு... என்னை கேள்வி கேட்க’’ எனக்கூறி, பூசாரி கன்னத்தில் பளார் என அறைந்தார். இதனால் நிலைகுலைந்து போன பூசாரி அமைதியாக அமர்ந்தார்.

அதன் பிறகு ஸ்ரீதர் வாண்டையார், திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் எழுந்து செல்லவில்லை. அப்போது மரியாதை செலுத்த வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், டிடிவி.தினகரன் ஆகியோர், ஸ்ரீதர் வாண்டையாரை சமாதானப்படுத்தினர். அதன் பிறகு ஸ்ரீதர் வாண்டையார் புறப்பட்டு சென்றார். இச்சம்பவம் குறித்து கமுதி போலீசார் விசாரணை செய்ததாக நினைவாலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.