*நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது
ஊட்டி : முதுமலை புலிகள் காப்பகத்தில் கடுமையான வெயில் காரணமாக வறண்டு காட்சியளித்த நீர்நிலைகளில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், தண்ணீர் தேடி அலைந்த வனவிலங்குகளின் தாகம் தீர்ந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் வரை நல்ல மழை பொழிவு இருந்தது. அதன்பின், காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு உறைப்பனி மற்றும் பகல் நேரங்களில் வெயில் கொளுத்தியது. குறிப்பாக மார்ச், ஏப்ரல் மே மாதங்களில் வரலாறு காணாத அளவிற்கு வெப்பம் தகித்தது.
இதன்காரணமாக, மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகள் வறண்டன. கிராமப்புறங்களில் உள்ள நீர்நிலைகள், தடுப்பணைகள் முழுமையாக வறண்டன. கடுமையான வெயில் காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் உள்ள நீர்நிலைகள், குளங்கள், தடுப்பணைகள், ஏரிகளில் நீரின்றி வறண்டது. மேலும் செடி, கொடிகள், புல்வெளிகள் காய்ந்து போய் பசுமை இழந்து காட்சியளித்தது. இதனால், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் தேடியும், உணவு தேடியும் அலைந்தன. ஓரிரு யானை, சிறுத்தை, காட்டுமாடு உள்ளிட்டவைகள் தண்ணீரின்றி உயிரிழந்தது. மேலும் மசினகுடி பகுதியில் கால்நடைகளும் உயிரிழந்தன.
வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வனத்துறை சார்பில் லாரிகள் மூலம் வனங்களில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் நீர் நிரப்பப்பட்டது. மேலும், கடுமையான வெயில் காரணமாக காட்டு தீயும் ஏற்பட்டு வந்தது. இதனால், கோடை மழையை எதிர்பார்த்து அனைத்து தரப்பினரும் காத்திருந்தனர். இம்மாத துவக்கத்தில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு சில நாட்கள் கனமழை பெய்தது. அதன்பின், சில நாட்கள் இடைவெளிக்கு பின் குமரி கடல் பகுதி மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் மழையின் தாக்கம் சற்று குறைவாக இருந்த நிலையில் மற்ற அனைத்து நாட்களிலும் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் கடந்த ஜனவரியில் இருந்து நீடித்து வந்த கடும் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளுமையான காலநிலை நீடிக்கிறது. முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பகாடு, மசினகுடி, மாயார், சீகூர் வனப்பகுதிகளில் நல்ல மழை பொழிவு இருப்பதால் வெயில் காரணமாக வறண்டு கிடந்த நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர துவங்கியுள்ளது. மாயாற்றிலும் நீர் வரத்து துவங்கியுள்ளது.
சிறு சிறு நீரோடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து வருகின்றன. இதன் காரணமாக, வனவிலங்குகளின் தண்ணீர் தேவை பூர்த்தியடைந்துள்ளது. இந்த மழையால் செடி கொடிகள் காய்ந்து போய் காட்சியளித்த முதுமலை புலிகள் காப்பக வனங்களும் விரைவில் பசுமைக்கு திரும்பும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.