முஸ்லிம்கள் பாஜவுக்கு வாக்களிப்பதில்லை துரோகிகளின் வாக்கு எங்களுக்கு வேண்டாம்: ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் சர்ச்சை
பாட்னா: பீகாரில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ம் தேதிகளில் 2 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் அர்வால் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியதாவது: ஒருமுறை நான் ஒரு ‘மவுல்வி’யிடம் (இஸ்லாமிய மதகுரு) ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை உள்ளதா என்று கேட்டேன். அதற்கு அவர் ஆம் என்றார். அத்தகைய அட்டைகள் இந்து-முஸ்லிம் அடிப்படையில் வழங்கப்படுகிறதா? என கேட்டேன்.
அவர் இல்லை என்றார். எனக்கு வாக்களித்தீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர் ஆம் என்றார். கடவுள் சத்தியமாக சொல்லுங்கள் என்றதும், இல்லை என பதிலளித்தார். ஒன்றிய அரசின் அனைத்து திட்டங்களின் பலன்களையும் முஸ்லிம்கள் பெறுகிறார்கள். ஆனால் எங்களுக்கு அவர்கள் வாக்களிப்பதில்லை. இத்தகையவர்களை நாங்கள் நமக் ஹராம் (துரோகிகள்) என அழைக்கிறோம்.
நமக் ஹராம் வாக்குகளை நான் விரும்பவில்லை என அந்த மவுல்வியிடம் கூறினேன். பிரதமர் மோடி உங்களை துன்புறுத்தினரா என்று அவரிடம் கேட்டதற்கு இல்லை என பதிலளித்தார். பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்காவும் வேலை செய்கிறது. அதனால் பீகார் இப்போது மாறிவிட்டது.இவ்வாறு அவர் கூறி உள்ளார். இதற்கு ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.