முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் முதல் மனைவியின் சம்மதம் இல்லாமல் இரண்டாவது திருமணம் செய்யக்கூடாது: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
திருவனந்தபுரம்: முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் முதல் மனைவியின் சம்மதம் இல்லாமல் இரண்டாவது திருமணம் செய்யக்கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள கருமத்தூர் பகுதியை சேர்ந்தவர் முகம்மது ஷெரீப் (44). இவர் கடந்த 2017ம் ஆண்டு காசர்கோட்டை சேர்ந்த ஆபிதா (38) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தார். ஆனால் ஷெரீப் முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யவில்லை.
இதனால் ஷெரீப்பின் இரண்டாவது திருமணத்தை பதிவு செய்ய திருக்கரிப்பூர் பஞ்சாயத்து செயலாளர் மறுத்தார். இதை எதிர்த்து ஷெரீப் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். முஸ்லிம் மத சட்டத்தின்படி இரண்டாவது திருமணம் செய்ய உரிமை உண்டு என்பதால் தன்னுடைய திருமணத்தை பதிவு செய்ய உத்தரவிட நடவடிக்கை எடுக்கும்படி இவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த நீதிபதி குஞ்சிகிருஷ்ணன், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் முதல் மனைவியின் சம்மதம் இல்லாமல் இரண்டாவது திருமணம் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டார்.
நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்த விவரங்கள் வருமாறு: அரசியலமைப்பு சட்டத்தில் இரு பாலருக்கும் சம உரிமை உள்ளது. ஆண்களுக்கு கூடுதல் அதிகாரம் எதுவும் கிடையாது. தன்னை முறைப்படி விவாகரத்து செய்யாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய 99.99 சதவீதம் பெண்களும் விரும்ப மாட்டார்கள். திருமணத்தை பதிவு செய்யும் விண்ணப்பத்தில் வேறு மனைவிகள் இருந்தால் அவர்களது விவரங்களை குறிப்பிட வேண்டும். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் வேறு திருமணத்தை செய்யலாம்.
ஆனால் திருமணத்தை பதிவு செய்ய வேண்டுமென்றால் முதல் மனைவியின் சம்மதம் கண்டிப்பாக தேவை. இரண்டாவது திருமணத்திற்கு முதல் மனைவியின் சம்மதம் தேவையில்லை என்று குர்ஆனில் கூட கூறவில்லை. மனுதாரர் இரண்டாவது திருமணத்தை பதிவு செய்வதற்கு மீண்டும் பஞ்சாயத்து அலுவலகத்தை அணுகலாம். முதல் மனைவிக்கு நோட்டீஸ் அனுப்பி அவரது கருத்தை கேட்ட பின்னரே அடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
