துபாய்: ஜெர்மன் நாட்டின் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஷிவாங்க் வருண் வரதராஜன், துபாயில் பிறந்தார். இச்சிறுவனுக்கு சிறுவயதில் இருந்தே இசையின் மீது தீராத ஆர்வம் இருந்து வந்துள்ளது. இதுகுறித்து அவரது தாயார் யாலினி வரதராஜன் கூறும்போது, ‘ஷிவாங்க் குழந்தையாக இருந்தபோதே வீட்டில் வாத்திய இசைப் பாடல்களை தொடர்ந்து ஒலிக்க விடுவோம். இதனால், தனது மூன்றாவது வயதிலேயே தாளம் மற்றும் மெல்லிசைக்கு ஏற்ப துல்லியமாக வாசிப்பான்.
இசையின் தனித்துவமான பாணியை வைத்து இசையமைப்பாளர்களை அடையாளம் காணும் திறனையும் வளர்த்துக் கொண்டான்’ என்றார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 14ம் தேதி துபாயில் நடைபெற்ற கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சியில் ஷிவாங்க் பங்கேற்றான். அப்போது, பல்வேறு இசையமைப்பாளர்களின் புகழ்பெற்ற இசைத் துணுக்குகள் வரிசையாக இசைக்கப்பட்டன.
அவற்றை கூர்மையாகக் கேட்ட சிறுவன் ஷிவாங்க், ஒரு நிமிடத்தில் பாக், மொசார்ட், பீத்தோவன், சோபின், விவால்டி, சாய்கோவ்ஸ்கி, வாக்னர், பிராம்ஸ் உட்பட 16 இசையமைப்பாளர்களை துல்லியமாக அடையாளம் கண்டு பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினான்.
இதையடுத்து, ஒரு நிமிட சவாலில் நிதானத்துடனும் மிகுந்த கவனத்துடனும் செயல்பட்டு அனைத்து இசையமைப்பாளர்களையும் சரியாக அடையாளம் கண்ட ஷிவாங்கிற்கு கின்னஸ் உலக சாதனைக்கான அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்கப்பட்டது. அவனது இந்தத் திறமையை ‘அசாதாரண இசைப் பரிசு’ என கின்னஸ் உலக சாதனை அமைப்பு பாராட்டியுள்ளது.