இசையை வணிக ரீதியாக பயன்படுத்திய விவகாரம் டியூட் படத்திலும் 2 பாடல்களை பயன்படுத்தியுள்ளனர்: உயர் நீதிமன்றத்தில் இளையராஜா தரப்பு பரபரப்பு வாதம்
சென்னை: சோனி மியூசிக் என்டர்டைன்மென்ட் இந்திய பிரைவேட் லிமிடெட் நிறுவனம், எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் தனது பாடல்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக அந்த நிறுவனங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரபல இசையமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இசையமைப்பாளர் இளையராஜா இசையை வணிக ரீதியாக பயன்படுத்தி ஈட்டிய வருமானம் தொடர்பான விவரங்களை சோனி நிறுவனம் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இளையராஜா தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, வழக்கில் சோனி நிறுவனம் இதுவரை எந்த பதில்மனுவும் தாக்கல் செய்யவில்லை. தற்போது வெளியாகியுள்ள டியூட் என்ற திரைப்படத்தில் கூட இளையராஜாவின் இரண்டு பாடல்களை பயன்படுத்தி உள்ளனர் என்று வாதிட்டார். சோனி நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன், சோனி நிறுவனம் ஈட்டிய வருவாயை சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தயாராக உள்ளோம்.
இளையராஜாவின் 500க்கும் மேற்பட்ட இசை அமைப்புகளின் பதிப்புரிமை தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை மும்பை உயர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி சோனி நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவிற்கு இளையராஜா பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உதரவிட்டுள்ளதாக தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி என்.செந்தில் குமார், டியூட் திரைப்படம் தொடர்பாக தனியாக வழக்கு தொடர மனுதாரருக்கு அறிவுறுத்தி இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 19ம் தேதிக்கு தள்ளி வைக்கிறேன் என்று உத்தரவிட்டார்.
