Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காளான் வளர்ப்பில் கலக்கல் வருமானம்!

காளான் வளர்ப்புக்கு வைக்கோல் கொண்டு படுக்கை அமைப்பதுதான் காளான் வளர்ப்பாளர்களின் வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் சிதறால் பதித்தவிளை பகுதியைச் சேர்ந்த கவின்ராஜ் என்ற இளைஞர் மரத்தூளைக் கொண்டு படுக்கை அமைத்து காளான் வளர்ப்பில் ஈடுபடுகிறார். இது வைக்கோல் படுக்கையை விட பல விதத்தில் கூடுதல் பலன் தருவதாக தெரிவித்திக்கிறார். இதுகுறித்து கடந்த இதழில் கண்டோம். அவர் நமக்களித்த பேட்டியின் தொடர்ச்சியை இந்த இதழில் காணலாம். `` பால் காளான் 40வது நாளில் அறுவடைக்குத் தயாராகும். முதல் அறுவடை முடிந்த பிறகு 10 நாட்களுக்கு ஒருமுறை மகசூல் கிடைக்கும். சிப்பிக் காளானில் 120 நாட்கள் வரை மகசூல் கிடைக்கும். பால் களான் 160 நாட்கள் வரை மகசூல் கிடைக்கும். இதற்கு காரணம் மரப்பொடிகளை கொண்டு பெட் தயாரிப்பதுதான். மரப்பொடிகள் எளிதில் கெட்டுவிடுவதில்லை. இதனால் நீண்டநாட்கள் நமக்கு பலன் கிடைக்கும். ஆனால் வைக்கோல் கொண்டு காளான் வளர்க்கும்போது சுமார் 60 நாட்களில் ஒரு பெட்டின் காலம் முடிந்துவிடும். அதன்பிறகு வேறு பெட் தயாரிக்க வேண்டும்.

வைக்கோல் கொண்டு தயாரிக்கப்படும் காளான் பெட் பெரியதாக இருக்கும். ஆனால் மரப்பொடியைக் கொண்டு தயாரிக்கும் பெட் சிறியதாக இருக்கும். இதனால் குறைந்த இடத்திலேயே அதிக பெட் அமைக்க முடியும். பெட் சிறியதாக இருந்தபோதும் மகசூல் அதிகமாகவே கிடைக்கும். வைக்கோல் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பெட்டில் இருந்து முதல் அறுவடையின்போது சுமார் 300 கிராம் காளான் கிடைக்கும். ஆனால் மரப்பொடி கொண்டு தயாரிக்கும் பெட் மூலம் முதல் அறுவடையில் 500 கிராம் வரை காளான் கிடைக்கும்.பால் காளான் வளர்க்க வீட்டின் மொட்டை மாடியையும், சிப்பிக் காளான் வளர்க்க வீட்டின் அருகே உள்ள காலி இடத்தையும் பயன்படுத்தி வருகிறேன். வெயிலின் தாக்கம் குறைவாக இருக்க தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீர் அறைக்கு வருவதுபோல் வடிவமைத்து இருக்கிறேன். அந்தத் தண்ணீர் நேரடியாக அங்கு வந்து கொட்டாமல், அங்கு வரிசையாக வைத்துள்ள ஓட்டின் மீது விழும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறேன். அந்த ஓட்டை ஒட்டி ஒரு மின்விசிறி வைத்திருக்கிறேன். மின்விசிறி சுழலும்போது, ஓட்டின் மீது விழும் தண்ணீரில் உள்ள குளிர்ச்சி காளான் பெட்டுக்கும் பரவும். இதனால் காளான் வளர்ச்சிக்கு ஏதுவான சீதோஷ்ண நிலை கிடைக்கிறது. சிப்பிக்காளான், பால் காளான் ஆகிய இரண்டு காளான் பெட்களின் மீது தினமும் ஸ்பிரேயர் மூலம் தண்ணீரும் தெளிக்கிறோம். இதனால் காளான் ஃப்ரெஷ்ஷாக இருக்கின்றன.

நான் உற்பத்தி செய்யும் காளான்களை எங்கள் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ ரூ.350க்கு விற்பனை செய்கிறேன். பொதுமக்கள் வந்து வாங்கும்போது அவர்களிடம் ரூ.400 என விற்பனை செய்கிறேன். இங்கு காளானுக்கு நல்ல டிமாண்ட் இருப்பதால் நான் உற்பத்தி செய்யப்படும் காளான்கள் அனைத்தும் விரைவாகவே விற்பனையாகி விடுகின்றன. இப்போது எனது பழையவீடு மட்டுமல்லாமல் எனது உறவினர் அருண்சிவாவின் பழையவீட்டையும் காளான் வளர்ப்புக்காக பயன்படுத்தி வருகிறேன். என்னிடம் தற்போது 500 சிப்பிக்காளான் பெட்களும், 1000 பால் காளான் பெட்களும் உள்ளன. ஒரு பெட் தயாரிக்க ரூ.60 வரை செலவு ஆகிறது. காளான் விற்பனை மூலம் மாதம் ரூ.1 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. இதில் காளான் விதை, பெட் தயாரிப்பு என என ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது. இதுபோக மாதம் கண்டிப்பாக ரூ.50 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது’’ என மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

தொடர்புக்கு:

கவின்ராஜ்: 9600415871

காளான் வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை

காளானை பொருத்தவரையில் அதிக ஈரப்பதம் உள்ள நேரத்தில் அறுவடை செய்யக்கூடாது. அதிக வெப்பநிலை அல்லது காற்றோட்டம் உள்ள நேரத்தில் அறுவடை செய்வது நல்லது. அதிக பனி அல்லது மழையுடன் அறுவடை செய்தால் காளான் ஈரமாகி அழுகலுக்கு உள்ளாகலாம். அதேபோல் அறுவடை செய்யும்போது கைகள் சுத்தமாக இருக்க வேண்டும். காளானைக் கையால் எடுத்த பிறகு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். அறுவடை செய்த காளான்களை சேமித்து வைக்கும் இடத்தில் தூசி, பூஞ்சை அல்லது கிருமி பரவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கவின்ராஜ் தனது காளான் வளர்ப்புக்கான விதைகளை திருவனந்தபுரம் வேளாண்மை கல்லூரியில் இருந்து ஒரு கிலோ ரூ.150 என்ற விலையில் வாங்கி வருகிறார். அவ்வப்போது தனது தேவைக்கு ஏற்ப இந்த விதைகளை வாங்கி வந்து காளான் உற்பத்தியில் ஈடுபடுகிறார்.